கோவை சுங்கம் பகுதியில் பாம்பு பிடி வீரர்கள் இருவருக்கு, இரு சக்கர வாகனங்கள் வழங்கப்பட்டன.
கோவை மாவட்டப் பகுதிகளில் பொது இடங்கள், தனி நபர்களின் வீடுகளில் புகும் பாம்புகளை மீட்கும் பணியில் பாம்புப் பிடி வீரர்களான அமீன், விக்னேஷ் ஆகியோர் ஈடுபட்டு வருகின்றனர். தன்னார்வலர்களான இவர்கள் இருவருக்கும் பாம்புகளை விரைந்து சென்று பிடிப்பதற்குத் தேவையான இருசக்கர வாகனம், தேவையான உபகரணங்கள் வாங்கிக் கொடுப்பதற்காக ஓசை சுற்றுச்சூழல் அமைப்பு முயற்சி செய்து வந்தனர்.

இந்த நிலையில் கோவையைச் சேர்ந்த மூத்த வழக்குரைஞர் பாலாஜி ஸ்ரீதர் தனது 60 ஆம் திருமண நாளையொட்டி, பாம்பு பிடி வீரர்களுக்கு உதவிட முன்வந்தார். இதையடுத்து அவர்களுக்கு புதிய இரு சக்கர வாகனங்கள், தலையில் மாட்டிக் கொள்ளும் வகையிலான விளக்குகள், டார்ச் விளக்குகள், பை உள்ளிட்ட உபகரணங்களை தனது சொந்த செலவில் வாங்கிக் கொடுத்தார்.சாதாரணப் பயன்பாட்டுக்கு மட்டுமல்லாமல், பாம்புகளை மீட்பதற்கான பிரத்யேக பெட்டிகள் மற்றும் உபகரணங்கள் அடங்கிய கிட் பேக்குகளுடன் வடிவமைக்கப்பட்ட இந்த வாகனங்களை, தன்னார்வலர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி கோவை ராமநாதபுரம் பகுதியில் நடைபெற்றது. இதில், வழக்குரைஞர் பாலாஜி ஸ்ரீதர் பங்கேற்று தன்னார்வலர்களுக்கு வாகனம் உள்ளிட்ட பொருள்களை வழங்கினார்.
நிகழ்ச்சியில், ஓசை அமைப்பின் தலைவர் காளிதாசன், பொருளாளர் செந்தில்குமார், அமைப்பாளர்கள் ரமேஷ், இக்பால், ராம்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.பொதுமக்கள் தங்கள் குடியிருப்புப் பகுதிகளில் பாம்புகளைக் கண்டால், உடனடியாக உதவிக்கு அழைக்கும் வகையில், இந்த வாகனங்களில் மீட்பாளர்களின் தொடர்பு எண்கள் தெளிவாக எழுதப்பட்டுள்ளன. இந்த எண்கள் மூலம் தொடர்பு கொண்டு பொதுமக்கள் முற்றிலும் இலவசமாகப் பாம்புகளை மீட்கக் கோரலாம். சுற்றுச்சூழல் பாதுகாப்பிலும், மனிதவிலங்கு மோதலைக் குறைப்பதிலும் முழு நேரப் பணியாக முக்கியப் பங்காற்றும் தன்னார்வலர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் இந்த வாகனங்கள் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டிருப்பதாக ஓசை காளிதாசன் தெரிவித்துள்ளார்.









