இந்தியாவுக்கு 125% வரி விதிப்பு..

வாஷிங்டன்: பரஸ்பர வரி என்கிற பெயரில் டிரம்ப் போட்டிருந்த வரியை சட்டவிரோதம் என்று அந்நாட்டு உச்சநீதிமன்றம் அறிவித்திருந்தது.இருப்பினும் 15% வரியை டிரம்ப் விதித்திருக்கிறார். இது தவிர, இந்தியாவிலிருந்து அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் சோலார் பேனல்களுக்கு டிரம்ப் 125% வரியை விதித்திருக்கிறார். இது இந்தியாவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்தியா, இந்தோனேசியா மற்றும் லாவோஸ் ஆகிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சோலார் பேனல்கள் மீது 125% வரியை அமெரிக்க வர்த்தகத் துறை விதித்துள்ளது. இந்த நடவடிக்கையால் இந்தியாவுக்குப் பெரிய வரிச் சுமை ஏற்பட்டுள்ளது. அமெரிக்க வர்த்தகத் துறையின் இணையதளத்தில் வெளியான அறிவிப்பில், இந்தியாவுக்கு 125.87% வரி விதிக்கப்பட்டுள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதேபோல், இந்தோனேசியாவுக்கு 104.38%, லாவோஸுக்கு 80.67% வரி விதிக்கப்பட்டுள்ளது. இந்த வரி உயர்வுக்கு, ‘அமெரிக்கா பர்ஸ்ட்’ என்ற கொள்கையே முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது. அரசு வர்த்தகப் புள்ளிவிவரங்களின்படி, இந்த 3 நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் $4.5 பில்லியன் மதிப்புள்ள பொருட்கள், 2025 ஆம் ஆண்டுக்கான மொத்த அமெரிக்க இறக்குமதியில் 3ல் 2 பங்காக இருந்ததாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்தியா, இந்தோனேசியா, லாவோஸ் ஆகிய நாடுகளிலிருந்து அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்பட்ட சோலார் பேனல்களுக்கு முன்னதாக அமெரிக்க மானியம் கொடுத்து வந்தது. ஆனால், மானியம் நியாயமற்ற முறையில் இருந்ததாக டிரம்ப் நிர்வாகம் குற்றம் சாட்டியிருந்தது. அமெரிக்க வர்த்தகத் துறை அளித்த தகவல்படி, குறிப்பாக இந்தியாவில் இருந்து 2024 ஆம் ஆண்டில் இறக்குமதி செய்யப்பட்ட சோலார் பேனல்களின் மதிப்பு $792.6 மில்லியன் ஆகும். இது 2022 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 9 மடங்கு அதிகம்.

டிரம்பின் ‘அமெரிக்கா பர்ஸ்ட்’ என்ற கொள்கை தொடர்வதால், இந்த முடிவு அமெரிக்க உற்பத்தியாளர்களுக்கு ஊக்கம் அளிக்கும் என்று டிரம்ப் ஆதரவாளர்கள் கூறுகிறார்கள். ஆனால் இந்த வரி வாடிக்கையாளர்களைதான் பாதிக்கும் என்றும், இந்திய பொருட்கள் அமெரிக்க சந்தையில் கடைசி இடத்திற்கு தள்ளப்படும் எனவும் அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். முன்னதாக அமெரிக்கா இந்தியா மீது 50% வரியை விதித்திருந்தது. இந்த வரி காரணமாக அமெரிக்காவுடன் இந்திய பேச்சுவார்த்தை மேற்கொண்டிருந்தது. பேச்சுவார்த்தையில், உடன்பாடு எட்டப்பட்டது. ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் இறக்குமதியை இந்தியா நிறுத்தியது. எனவே மொத்த வரியை 18% ஆக குறைத்தார் டிரம்ப். இருப்பினும், இந்த வரியை சட்டவிரோதம் என அமெரிக்க நீதிமன்றம் சொல்லிவிட்டது. இருப்பினும் எல்லா நாடுகளுக்கும் 15% வரியை விதிப்பதாக டிரம்ப் அறிவித்தார். இந்த பின்னணியில்தான் மீண்டும் இந்திய பொருட்கள் மீது, 125% வரி விதிக்கப்பட்டிருக்கிறது.