புதுடெல்லி: சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்களில் தயார் நிலை குறித்து ஆய்வு செய்ய தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்கள் ஆகியோர் பயணத்தை தொடங்கியுள்ளனர்.
தமிழகம், கேரளா, மேற்கு வங்கம், அசாம் ஆகிய 4 மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசம் ஆகியவற்றில் வரும் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் சட்டப்பேரவை தேர்தல்கள் நடைபெறவுள்ளன. இதற்கான அறிவிப்பை தலைமை தேர்தல் ஆணையம் அடுத்த மாதம் 2-வது வாரத்தில் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில இந்த 5 மாநிலங்களிலும் சட்டப் பேரவைத் தேர்தல் தயார் நிலை குறித்து ஆய்வு செய்யும் பணியை தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது. அசாம் மாநிலத்தில் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், தேர்தல் ஆணையர்கள் சாந்து மற்றும் விவேக் ஜோஷி தலைமையிலான குழு இன்று முதல் பிப்.18ம் தேதி வரை பயணம் செய்கிறது. இவர்கள் மாநில தேர்தல் ஆணையர், தேர்தல் அதிகாரிகள், தலைமைச் செயலாளர், டிஜிபி, மாவட்ட ஆட்சியர்கள், காவல் துறை அதிகாரிகள், அரசியல் கட்சியினர் ஆகியோரை சந்தித்து ஆலோசனை நடத்துவர். இவர்கள் தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு இந்த மாதம் இறுதியில் வருவர் எனத் தெரிகிறது. மேற்கு வங்கம் மற்றும் கேரளாவில் இவர்களது பயணம் இன்னும் முடிவு செய்யப்படவில்லை.







