இந்தியா அமெரிக்கா இடையே ஓராண்டாகவே வர்த்தக மோதல் நிலவி வந்தது. வர்த்தகப் பேச்சுவார்த்தை பல மாதங்களாக நடந்தபோதிலும் அது இறுதியாகவில்லை. இந்தச் சூழலில் தான் கடந்த சில நாட்களுக்கு முன்பு வர்த்தக டீல் இறுதியானது. அதன்படி இந்தியா மீதான வரி 50%ல் இருந்து 18%ஆக குறைக்கப்பட்டது.இருப்பினும், ஜவளி ஏற்றுமதியில் இந்தியாவைக் காட்டிலும் வங்கதேசத்திற்கு அதிக அமெரிக்கா சலுகை கொடுத்துள்ளதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்தனர். அதாவது ஜவளி ஏற்றுமதியில் வங்கதேசத்திற்கு ஜீரோ வரி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவுக்கு 18% வரி விதிக்கப்பட்டுள்ள நிலையில், இது இந்திய ஜவுளித்துறையைப் பாதிக்கும்.. குறிப்பாக திருப்பூரை மிக மோசமாகப் பாதிக்கும் என்று பரவலாக விமர்சனங்கள் எழுந்தன.இதற்கிடையே இது குறித்து வர்த்தகத் துறை அமைச்சர் பியூஷ் கோயல் விளக்கமளித்துள்ளார். அதாவது அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தத்தில் வங்கதேசத்திற்குக் கிடைத்த அதே ஜவுளிச் சலுகைகள், இந்தியாவுக்கும் கிடைக்கும் என மத்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார்.அதாவது அமெரிக்கப் பருத்தியை வாங்கி அதில் ஆடை செய்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யும்போது, அதற்கு வரி எதுவும் இருக்காது. வங்கதேச ஜவளி துறைக்கு இதுபோல ஒரு வரிச் சலுகையைத் தான் அமெரிக்கா கொடுத்திருந்தது. அதேபோன்ற ஒரு வரிச் சலுகை இந்தியா- அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்தில் சேர்க்கப்படும் என்று பியூஷ் கோயல் தெரிவித்தார். இருப்பினும், இதுவரை இந்த பாயிண்டு இந்திய அமெரிக்கக் கூட்டு அறிக்கை அல்லது அமெரிக்க வெள்ளை மாளிகை அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை.
இந்தியாவை விட வங்கதேசம் ஒரு சிறந்த வர்த்தக டீலை போட்டது என்ற என்ற குற்றச்சாட்டுகளை அமைச்சர் பியூஷ் கோயல் திட்டவட்டமாக நிராகரித்தார். வங்கதேசத்திற்குக் கொடுக்கும் அதே சலுகைகளை இந்தியாவுக்கும் அமெரிக்கா நீட்டிக்கும் என்றார். பியூஷ் கோயல் மேலும் பேசுகையில், “இந்தியாவை விட வங்கதேசம் வர்த்தகத்தில் அதிகப் பலன் பெற்றதாக ராகுல் காந்தி நாடாளுமன்றத்தில் பொய்யைப் பரப்பினார்.
அமெரிக்காவிடம் இருந்து பருத்தியை வாங்கி, அதில் ஆடை தயாரித்து ஏற்றுமதி செய்தால், இறக்குமதி வரி இல்லை என்ற வரிச்சலுகை தான் வங்கதேசத்திற்குக் கிடைக்கிறது. இந்தியாவுக்கும் நிச்சயம் அதே வரிச் சலுகை கிடைக்கும். இப்போது நமது ஒப்பந்தம் இறுதியாகி வருவதாலேயே அது குறித்துக் குறிப்பிடப்படவில்லை. இறுதி ஒப்பந்தத்தில் நிச்சயம் இவை எல்லாம் தெளிவாகும்” என்றார்.மேலும், அமெரிக்க விவசாயிகளுக்கு அதிக வரி சலுகையை இந்தியா அளித்துள்ளதாகவும் எதிர்க்கட்சிகள் விமர்சித்த நிலையில், இதற்குப் பதிலளித்த கோயல், “விவசாயிகளுக்குப் பயனளிக்கும் பல பொருட்கள் அமெரிக்கா, ஐரோப்பா, இங்கிலாந்து, சுவிட்சர்லாந்து, நார்வே, ஆஸ்திரேலியாவுக்கு அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்படும். இதன் மூலம் இன்று நாம் ஏற்றுமதி செய்யும் 5 லட்சம் கோடி ரூபாய், 10 லட்சம் கோடியாக மாறும். விவசாயிகள், மீனவர்கள், சிறு குறு நடுத்தரத் தொழில் நிறுவனங்களிடம் ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும்!” என்றார்.









