சாலையில் நின்ற ஒற்றை காட்டு யானையை கண்டு பொதுமக்கள் அச்சமடைந்தனர். வனப்பகுதிக்குள் சாலை அமைத்தது நமது தவறா? சாலைக்கு யானை வந்தது தவறா?
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில், 20க்கும் மேற்பட்ட மலை கிராமங்கள் உள்ளன. இந்த வனப்பகுதியில் யானை, சிறுத்தை, மான்கள் உள்ளிட்ட வனவிலங்குகளின் வாழ்விடமாக உள்ளது. இந்நிலையில் பாச்சலூர் செல்லும் சாலையில், பெத்தேல்புரம் அருகே ஒற்றை காட்டு யானை, சாலையை வழிமறித்து நின்றது. ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டுக்கு காய்கறிகள் கொண்டு வந்த விவசாயிகள், இதை பார்த்து அச்சமடைந்தனர்.

சிறிது நேரம் சாலையில் அங்குமிங்கும் நடமாடிய அந்த காட்டு யானை, மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றது. காட்டு யானையை பார்த்த ஒரு சிலர், அதன் அருகே சென்று வீடியோ எடுக்க முற்பட்டனர். இதுபோன்ற செயல்களால், யானை கோபமடைந்து தாக்கக்கூடும்.அருகே செல்வதை தவிர்க்க வேண்டும் என வனத்துறை அறிவுறுத்தி உள்ளது. வனப் பகுதிக்குள் சாலை அமைத்தது நமது தவறா? அல்லது சாலைக்கு யானை வந்தது அதன் தவறா? என வன ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.








