பட்டியல் இன அதிகாரி அமர்ந்த இடத்தை சாணி போட்டு மொழுகிய திமுக தொழிற்சங்க செயலாளர்.!

பட்டியல் இன அதிகாரி அமர்ந்த இடத்தை, சாணி போட்டு மொழுகிய திமுக தொழிற்சங்க செயலாளர் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்ட நிலையில், அவர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விளக்கமளிக்க,ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளருக்கு, தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அரசு போக்குவரத்துக்கழகம் கிளை 1 ல் ஓட்டுநராக பணிபுரிபவர் சசிராஜ். இவர் திமுக தொழிற்சங்கத்தில் செயலாளராக இருக்கிறார் .
மேட்டுப்பாளையம் பணிமனையில் டிரைவரும், கண்டக்டர் என 43 நபர்கள் பணியாற்றி வருகின்றனர். ஆதிக்க சாதியை சார்ந்த சசிராஜின் கட்டுப்பாட்டிலேயே இந்த கிளை இயங்கி வருகிறது. ஆதிக்க சமூகத் தினருக்கு மட்டும் அருகிலேயே டூட்டியை வழங்கும் இவர், பட்டியல், பழங்குடியின மக்கள் என்றால் தொலைதூர டூட்டியை போட்டு வஞ்சிப்பது வாடிக்கையாக நட்ப்பதாக கூறப்படுகிறது.கடந்த சில மாதங்களில் பட்டியல் சமூகத்தினரை சேர்ந்த ராஜ்குமார், பிரகாஷ் ஆகியோர் இங்கு பணிமனை மேலாளராகப் பணியாற்ற வர, இவர் கொடுத்த குடைச்சலால், ஒருவர் 20 நாட்களிலும், மற்றொருவர் 15 நாட்களே இங்கு வேலைபார்த்தனர். அதன்பின் இடமாற்றலாகினர். இதனைவிடக் கொடுமை என்னவென்றால், ‘முன்பு இங்கு பணிசெய்தவர்கள் பட்டியலின அதிகாரி கள். புதிதாக வருபவர் நம்முடைய சாதி. ஆதலால், அவர்கள் இருந்த இடத்தை சாணிபோட்டு மொழுகிவிட்டு, ‘புதிய அதிகாரியை வரவேற்போம்’ என அரசு அலுவலகத்தையே சாணிபோட்டு மொழுகி, சாதிய வன்கொடுமையை நிகழ்த்தியுள்ளது, ஊழியர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து உயர் அதிகாரிகளுக்கு புகாரளிக்கப்பட்டது. இதனையடுத்து சசிராஜை தற்காலிக பணி நீக்கம் செய்து , கோவை மண்டல உதவி மேலாளர் (சட்டம்) உத்திரவிட்டுள்ளார்.

தற்காலிக பணி நீக்க உத்திரவில் மேட்டுப்பாளைம் அரசு போக்குவரத்துக்கழக கிளை 1ல் , மேலாளராக பிரகாஷ்குமார் என்ற பட்டியலினத்தை சார்ந்தவர் பணிபுரிந்த போது, அவரிடம் மிகவும் கேவலமாக பேசியும், மெமோ கொடுத்தால் நான் பதில் கொடுக்க மாட்டேன், உன்னை மாற்றுகிறேன் என ஓட்டுநரும், திமுக தொழிற்சங்க செயலாளருமான சசிராஜ் மிரட்டியுள்ளார். மேலும் கிளை மேலாளர் பிரகாஷ்குமார் உக்கடம் கிளைக்கு பணியிட மாறுதல் செய்யப்பட்டார். அவர் கிளையில் இருந்து வெளியேறும் முன்பாகவே கிளையை பிடித்த பீடையை ஒழித்துவிட்டோம், புது பிரான்ஜ் மேனேஜர் வருகிறார். பழைய பீடை இருந்த இடத்தை சுத்தம் பண்ணுங்க என்று பழைய கிளை மேலாளர் அமர்ந்திருந்த TC அறை, AF அறை மற்றும் அதன் முன்புரங்கள் அனைத்தையும் மாட்டுச்சாணம் கொண்டு மொழுகி, அவமானப்படுத்தியுள்ளார். பட்டியல் சமூகத்தை சார்ந்தவர்களை தொடர்ந்து தீண்டாமை வன்கொடுமைக்குள் உள்ளாக்குவதும், தீண்டாமை பார்ப்பதும், சாதி பார்த்து டூட்டி போடுவது என தொடர்ந்து தீண்டாமை வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளதாக புகார் வந்துள்ளது. புகாரின் பேரில் 28.01.2026 ல் இருந்து தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும், 15 நாட்களுக்குள் உரிய விளக்கம் அளிக்கவும், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் கோவை மணடல சட்டப்பிரிவின் உதவி மேலாளர் உத்திரவிட்டுள்ளார்.

இதுகுறித்து விளக்கமளித்த சசிராஜ். சாதி பார்த்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களுக்கு பணி வழங்க வில்லை எனவும், மேலாளர் அமர்ந்திருந்த அறையில் அதிகளவு கறை இருந்ததால், சாணி போட்டு மொழுகியதாக தெரிவித்தார்.

இந்த நிலையில் சசிராஜ் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து 5 நாட்களுக்குள், மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் துறை கண்காணிப்பாளர் விளக்கமளிக்க, தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில் குற்றம் சாட்டப்பட்டவரின்
முகவரி, அவர் மீது பதியப்பட்டுள்ள வழக்கு விபரங்கள், கைது செய்யப்பட்டுள்ளதா? வழக்கு எண், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதா போன்ற விபரங்களை மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல் துறையிடம் கேட்டுள்ளது.