கோவை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் தனியார் இன்ஜினியரிங் கல்லூரிகள், கலைக் கல்லூரிகள் உட்பட பல்வேறு கல்லூரிகள் உள்ளன .இந்த கல்லூரிகளில் தமிழ்நாடு , கேரளா, மற்றும் பல்வேறு மாவட்டங்கள், மாநிலங்கள், வெளிநாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் படித்து வருகிறார்கள். இவர்களில் பலர் கல்லூரி விடுதிகளில் தங்காமல் வெளியே தனியாக அறை எடுத்து தங்கி கல்லூரிக்கு சென்று வருகிறார்கள். இதனால் அவர்கள் தங்களின் விருப்பம் போல செயல்பட வாய்ப்பு ஏற்படுகிறது. இதன் காரணமாக சில மாணவர்கள் போதைப் பொருட்களை பயன்படுத்தும் நிலையில் உள்ளனர். அந்த மாணவர்களை குறி வைத்து போதை பொருட்களை விற்பனை செய்யும் கும்பல் பணம் சம்பாதித்து வருகிறது. இந்த நிலையில் ‘ஆபரேஷன் கிளீன் கோவை ” திட்டத்தின் கீழ் கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் .கார்த்திகேயன் உத்தரவின் பேரில் செட்டிபாளையம், மதுக்கரை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட செட்டிபாளையம், மலுமிச்சம்பட்டி, கோவில்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் மாணவர்கள் தங்கியுள்ள அறைகளில் போலீசார் நேற்று அதிரடி சோதனை நடத்தினார்கள் . இதில் 2 டி.எஸ்.பி.க்கள், 10 இன்ஸ்பெக்டர்கள் மற்றும் சப் இன்ஸ்பெக்டர்கள். 400 போலீசார் அடங்கிய குழுவினர் கல்லூரி மாணவர்கள் தங்கி இருக்கும் அறைகளில் சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கிருந்த கஞ்சா,குட்கா, கத்தி வீச்சரிவாள் ,வாள்,உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
இது குறித்து கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர். கார்த்திகேயன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- கல்லூரி மாணவர்கள் தங்கியிருக்கும் அறைகளில் சோதனை நடத்தப்பட்டது .அந்த அறைகளில் இருந்து 6.3கிலோ கஞ்சா ,52 கிலோ குட்கா, 8 ஆயுதங்கள், போலியான பதிவு எண் மற்றும் முறையான ஆவணங்கள் இல்லாத 46 இருசக்கர வாகனங்கள், ஒரு கார் மின்னணு சாதனங்கள், ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 13 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சூடான்நாட்டைச் சேர்ந்த மாணவர் உட்பட 55 பேரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்து வருகிறோம் .இதில் 4பேர் மீது ஏற்னவே கொலை வழக்கு, கொள்ளை, வழக்குகள் உள்ளன. குற்ற பின்னணி உள்ளவர்கள் வெளி மாவட்டங்களில் இருந்து வந்து கோவையில் அடைக்கலம் புகுந்துள்ளனர். அவர்கள் மாணவர்களை குறி வைத்து போதை பொருட்களை விற்பனை செய்கிறார்கள். செட்டிபாளையம், மதுக்கரை ,சூலூர் நீலாம்பூர், கே ஜி சாவடி உள்ளிட்ட பகுதிகளில் போதை பொருட்கள் பழக்கம் அதிகமாக இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. அதன் பெயரில் சோதனை நடத்தப்பட்டது. விசாரணை முடிந்த பிறகு தான் போதை பொருட்கள் எங்கிருந்து வந்தது? என்பது தெரிய வரும் போதை பொருள் விற்பனையில் கல்லூரியிலிருந்து இடையில் நின்ற மாணவர்களும் உள்ளனர்.அவர்கள் வழி தவறி செல்வதை தடுக்க தேவையான ஆலோசனைகள் வழங்கி மீண்டும் படிப்பு தொடர்வதற்கு முயற்சி எடுத்து வருகிறோம். கல்லூரிகள் மற்றும் மாணவர்கள் தங்கும் விடுதிகளில் போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். கொடுங் குற்றங்கள், கஞ்சா, போதை பொருட்கள் விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.