தவெக மாநாடு முடிந்து ஒரே நேரத்தில் கிளம்பியதால் மதுரை – தூத்துக்குடி நெடுஞ்சாலையில் சிக்கி தவித்த தொண்டர்கள்.!!

துரை: தவெக மாநாடு முடிந்து ஒரே நேரத்தில் புறப்பட்ட தொண்டர்களால் எலியார்பத்தி சுங்கச்சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

மதுரை – தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் வரிசையாக வாகனங்கள் அணிவகுத்து ஊர்ந்து செல்கின்றன.

தமிழக வெற்றிக் கழகத்தை விஜய் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கினார். கடந்த அக்டோபர் 27 ஆம் தேதி தவெகவின் முதல் மாநில மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நடத்தப்பட்டது. இந்த மாநாட்டில் லட்சக்கணக்கான தவெக தொண்டர்கள் பங்கேற்றனர். இந்த மாநாட்டில் விஜய்யின் முதல் அரசியல் பேச்சு, அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தது.

இந்நிலையில், தவெகவின் இரண்டாவது மாநில மாநாடு மதுரை – தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பாரபத்தி என்ற பகுதியில் வியாழக்கிழமை மாலை நடைபெற்றது. மாநாட்டில் பங்கேற்க புதன்கிழமை முதலே தொண்டர்கள் சாரை சாரையாக வந்த வண்ணம் இருந்தனர். வியாழன் காலையில் மதுரை தூத்துக்குடி சாலையில் எங்கு பார்த்தாலும் தவெகவினரின் வாகனங்களாக வந்து கொண்டிருந்தன.

தவெக மாநாடு பிற்பகல் 3.30 மணியளவில் தொடங்கிய நிலையில், 6 மணிக்கு முன்பாகவே முடித்துக் கொள்ளப்பட்டது. இந்த மாநாட்டில் விஜய் ராம்ப் வாக் முடிந்ததும் தொண்டர்கள் ஏராளமானோர் வெளியேறத் தொடங்கினர். விஜய் சுமார் 35 நிமிடங்கள் இந்த மாநாட்டில் உரையாற்றினார். விஜய் உரையாற்றிய பிறகு மாநாடும் முடிந்தது.

இதையடுத்து ஒரே நேரத்தில் தொண்டர்கள் கூட்டம் கூட்டமாக வெளியேறினர். இதனால், மாநாடு நடைபெற்ற பாரபத்தி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. எலியார்பத்தி சாலையில் வாகனங்கள் நத்தை போல ஊர்ந்து சென்றன. மதுரை – தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் நள்ளிரவு வரை வாகனங்கள் ஊர்ந்தபடியே சென்று கொண்டிருக்கின்றன.

அருகில் உள்ள பகுதிகளைச் சேர்ந்த தவெக தொண்டர்கள், போக்குவரத்து நெரிசல் காரணமாக பொது போக்குவரத்துக்கு தாமதம் ஏற்படுவதால், பல கி.மீ தூரம் நடந்தே சென்றனர்.