தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு..!

தமிழ்நாட்டின் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் பரிசீலனை முடிந்த நிலையில் இன்று (பிப்.7) இறுதி வாக்காளர் பட்டியல் வெளியாகிறது

சென்னை: தமிழ்நாட்டில் வருகிற 19 ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது.

தேர்தலில் போட்டியிட 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளனர். இந்நிலையில் இன்று (பிப்.7) இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் எனத் தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது.

தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள் என 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும், 12 ஆயிரத்து 838 வார்டு உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் அட்டவணையினை ஜன.26ஆம் தேதியன்று தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டிருந்தது.

பிப்.5 ஆம் தேதி வேட்பு மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டன. சில மாவட்டங்களில் வேட்பு மனுக்களில் குளறுபடிகள் செய்தவர்களின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. பிரபலமான பெரிய கட்சிகளின் வேட்பு மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டிருந்தன.

பரிசீலனை செய்யப்பட்டு இறுதி வேட்பாளர் பட்டியல் இன்று (பிப்.7) மாலை வெளியிடப்பட உள்ளது. இந்நிலையில் வேட்பு மனுக்கள் வாபஸ் பெற விரும்புவர் இன்று பெற்றுக் கொள்ளலாம்.

வாபஸ் பெறுவதற்கு இன்றே கடைசி நாளாகும். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு அனைத்து கட்சிகளும் தேர்தல் பரப்புரையைத் தொடங்கியுள்ளன.