திமுக எம்பி., டி.ஆர்.வி.எஸ்.ரமேஷுக்கு எதிரான முந்திரி ஆலை தொழிலாளி கொலை வழக்கு விசாரணையை, செங்கல்பட்டு மாவட்ட நீதிமன்றத்துக்கு மாற்றி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடலூர் திமுக எம்.பி. டி.ஆர்.வி.எஸ்.ரமேஷ். இவருக்குச் சொந்தமான முந்திரி தொழிற்சாலை, பண்ருட்டி அருகே பனிக்கன்குப்பத்தில் உள்ளது. இந்த ஆலையில் பணிபுரிந்த, பண்ருட்டி அடுத்த மேல்மாம்பட்டு பகுதியை சேர்ந்த தொழிலாளி கோவிந்தராசு, கடந்த 2021-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் கொலை செய்யபட்டார்.
இந்த கொலை வழக்கில் திமுக எம்பி. ரமேஷ் மற்றும் முந்திரி ஆலை ஊழியர்கள் உள்பட 5 பேர் கைது செய்யபட்டனர்.
இந்த கொலை வழக்கை விசாரித்த விழுப்புரம் மாவட்ட சி.பி.சி.ஐ.டி., போலீசார், ரமேஷ் உள்ளிட்டோருக்கு எதிராக, கடலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.
இந்நிலையில், கடலுார் நீதிமன்றத்தில் நடந்து வரும் இந்த வழக்கின் விசாரணையை, வேறு நீதிமன்றத்துக்கு மாற்றக் கோரி, கோவிந்தராசுவின் மகன் செந்தில்வேல், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், ‘வழக்கு விசாரணை நடக்கும் வளாகத்தில், மாவட்ட கலெக்டர் அலுவலகம், எஸ்.பி., அலுவலகம் உள்ளன. அங்கு நடக்கும் அரசு நிகழ்ச்சியில், எம்.பி., பங்கேற்பதால், அரசு அதிகாரிகள் தொடர்பில் உள்ளனர். இது, அரசு தரப்பு சாட்சிகளாக உள்ள முந்திரி ஆலை தொழிலாளர்கள், கிராமவாசிகள், நீதிமன்ற பணியாளர்கள், போலீசாருக்கு, அச்ச உணர்வை ஏற்படுத்தும்.
காவல்துறை விசாரணையில் எம்பி. ரமேஷ் தலையிட்டு, வழக்கை திசை திருப்ப முயல்வதால். அரசு வழக்கறிஞர் மீது நம்பிக்கை இல்லை’, என்று மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள எம்பி., விசாரணை நீதிமன்றம் அமைந்துள்ள மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பதே, வழக்கை வேறு நீதிமன்றத்துக்கு மாற்ற போதுமான காரணம் எனக்கூறி, வழக்கை புதுச்சேரி நீதிமன்றத்துக்கு மாற்றி உத்தரவிட்டார்.
அப்போது அரசு தரப்பு வழக்கறிஞர், வழக்கை புதுச்சேரிக்கு மாற்ற வேண்டாம் விழுப்புரம் மாவட்ட நீதிமன்றத்துக்கு மாற்றும்படி கோரிக்கை வைத்தார்.
இதையடுத்து, இந்த வழக்கின் விசாரணையை கடலூர் நீதிமன்றத்திலிருந்து, செங்கல்பட்டு மாவட்ட நீதிமன்றத்துக்கு மாற்றி நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவிட்டார்.
மேலும், வழக்கு தொடர்பான ஆவணங்களை உடனடியாக செங்கல்பட்டு நீதிமன்றத்துக்கு அனுப்ப வேண்டும். செங்கல்பட்டு நீதிமன்றம் இந்த வழக்கை ஆறு மாதங்களுக்குள் விசாரித்து முடிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.