ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பிரசித்தி பெற்ற பண்ணாரி அம்மன் கோவில் குண்டம் திருவிழா ஏப்ரல் 3 மற்றும் 4 ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது. திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்துவது வழக்கம். இந்த ஆண்டு திருவிழா கடந்த 20 ஆம் தேதி திங்கட்கிழமை இரவு பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. இதைத் தொடர்ந்து கடந்த 3 நாட்களாக சத்தியமங்கலம் சுற்றுவட்டார பகுதியில் உள்ள கிராமங்களில் பண்ணாரி அம்மன் சப்பரம் திருவீதி உலா தொடங்கி நடைபெற்று வருகிறது. நேற்று காலை தொட்டம்பாளையம், வெள்ளியம்பாளையம் புதூர் மற்றும் இக்கரை தத்தப்பள்ளி கிராமங்களில் பண்ணாரி அம்மன் சப்பரம் திருவீதி உலா நடைபெற்றது. இதை தொடர்ந்து நேற்று மாலை இக்கரை தத்த பள்ளி கிராமத்திலிருந்து அக்கரை தத்தப்பள்ளி கிராமத்திற்கு செல்வதற்காக பண்ணாரி அம்மன் சப்பரம் அப்பகுதியில் இருந்த பவானி ஆற்றை பரிசலில் கடந்து செல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக பவானி ஆற்றங்கரையில் அலங்கரிக்கப்பட்ட பரிசலில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு பண்ணாரி அம்மன் சப்பரம் பரிசலில் ஏற்றப்பட்டு மீனவர்கள் பரிசலை துடுப்புகளை பயன்படுத்தி இயக்கினர். பரிசலில் பவானி ஆற்றை கடந்து அக்கரை தத்தப்பள்ளி கிராமத்திற்கு பண்ணாரி அம்மன் சப்பரம் வந்து சேர்ந்தது. பவானி ஆற்றில் அம்மன் சப்பரம் பரிசலில் ஆற்றை கடக்கும் நிகழ்வை கரையிலிருந்து கிராம மக்கள் 200க்கும் மேற்பட்டோர் கண்டு களித்தனர். இன்று உத்தண்டியூர், அய்யன் சாலை, ராமாபுரம், தாண்டாம்பாளையம், கெஞ்சனூர் உள்ளிட்ட பகுதிகளில் திருவீதி உலா நடைபெறுகிறது..