இன்று விநாயகர் சதுர்த்தி விழா: கோவையில் 2,094 சிலைகள் வைத்து சிறப்பு வழிபாடு..!

கோவை : நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா இன்று ( புதன்கிழமை) சிறப்பாக கொண்டாடப்படுகிறது. கொரோனா காரணமாக 2ஆண்டுகளாக பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடு நடைபெறவில்லை. கொரோனா பாதிப்பு குறைந்ததால் இந்த ஆண்டு எந்தவித கட்டுப்பாடுகளும் இன்றி சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. இது தொடர்பாக இந்து அமைப்பினர் மற்றும் முஸ்லிம் அமைப்புகளுடன் போலீசார் ஆலோசனை நடத்தினர். இதையடுத்து இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தியை யொட்டி கோவை புறநகரில் 1,564 சிலைகளும்,மாநகரில் 530 சிலைகளும் என மொத்தம் 2,094 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்து வழிபாடு நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதன்பிறகு விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு நீர் நிலைகளில் கரைக்கும் நிகழ்ச்சி வருகிற 2,
மற்றும் 4 -ந் தேதிகளில் நடக்கிறது. இதையொட்டி கோவை மாநகரில் 1,500 போலீசாரும், புறநகரில் 2 ஆயிரம் போலீசாரும் என மொத்தம் கோவை மாவட்டத்தில் 3,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள். இதுகுறித்து கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- கோவை மாநகரில் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள்.மாநகரில் உள்ள 11 சோதனை சாவடிகளில் கண்காணிப்பு தீவிரபடுத்தப்பட்டுள்ளது. விநாயகர் சிலை பிரதிஷ்டை ஊர்வலம் என அனைத்து நடவடிக்கைகளும் கண்காணிப்பு கேமரா மற்றும் டிரோன் கேமரா மூலம் கண்காணிக்கப்படும்.விநாயகர் சதுர்த்தி விழா மற்றும் ஊர்வலம் அமைதியாக நடைபெற அனைத்து நடவடிக்கைகளும் தயார் நிலையில் உள்ளன. மத நல்லிணக்கத்திற்கு எதிராக செயல்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் .இவ்வாறு அவர் கூறினார்.