கட்சி துண்டு அணிந்ததால் அதிமுக வேட்பாளருக்கு எதிர்ப்பு : விரலில் வைக்கப்படும் மை அழியவில்லை என தென்னரசு பேட்டி.!!

ரோடு : தேமுதிக வேட்பாளரை தொடர்ந்து கட்சி துண்டு, கரை வேட்டியோடு வந்த அதிமுக வேட்பாளருக்கு தேர்தல் அதிகாரிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது. காலை 7 மணிக்கு தொடங்கிய இந்த வாக்குப்பதிவு, மாலை 4 மணி வரை நடைபெறுகிறது. அந்த தொகுதி மக்கள் ஆர்வமுடன் நீண்ட வரிசையில் நின்று ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர்.அந்த வரிசையில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் தென்னரசு தனது வாக்கினை பதிவு செய்தார்.அதிமுக வேட்பாளர் தென்னரசு கருங்கல்பாளையத்தில் உள்ள அக்ரஹாரம் கல்லு பிள்ளையார் கோவில் தெருவில் மாநகராட்சி பள்ளியில் தனது வாக்கினை பதிவு செய்தார்.

வாக்களிப்பதற்கு முன்னதாக ஈரோடு கிழக்கு தொகுதியில் வாக்களிக்க கட்சி துண்டு, கரை வேட்டியுடன் வந்த அதிமுக வேட்பாளர் தென்னரசுவுக்கு எதிர்ப்பு தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர். கட்சியை குறிக்கும் வகையில் கரை வேட்டி அணியக்கூடாது என துணை ராணுவப் படையினர் கூறியதால் தென்னரசு வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதையடுத்து தேர்தல் விதிமுறை பற்றி தேர்தல் அலுவலர் விளக்கினார். தேர்தல் அதிகாரிகளின் அறிவுறுத்தலை அடுத்து உடையை மாற்றி வந்து அதிமுக வேட்பாளர் தென்னரசு வாக்களித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘தேர்தல் ஏற்பாடுகள் நன்றாக செய்யப்பட்டுள்ளன. வெற்றிபெறுவோம் என்ற நம்பிக்கை இருக்கிறது. விரலில் வைக்கப்படும் மை அழியவில்லை,’என்றார்.

இதே போன்று தேமுதிக வேட்பாளரும் கட்சி துண்டு, கரை வேட்டியுடன் வாக்களிக்க வாக்குச் சாவடிக்கு வந்து இருந்தார்.தேர்தல் அதிகாரிகள் அறிவுறுத்தலை அடுத்து, ஆனந்த் உடையை மாற்றிய பிறகு வாக்களித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.