மகர விளக்கு பூஜை : சபரிமலையில் இன்று மாலை 5 மணிக்கு நடை திறப்பு..!

பரிமலையில் வரும் ஜனவரி 14 அன்று மகரவிளக்கு பூஜை நடைபெற உள்ள நிலையில் இன்று டிசம்பர் 30 மாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட உள்ளது. இன்று முதல் ஜனவரி 20 ஆம் தேதி வரை சபரிமலை நடை திறந்து பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.

சபரிமலையில் தற்போது மண்டல பூஜை முடிந்த நிலையில் அடுத்த மகர விளக்கு பூஜைக்கு தடையின்றி மின்சாரம் வழங்க மின் விநியோகம் செய்யும் வழித்தடங்களில் பழுதுகள் சரி செய்யும் பணிகளில் அதிகாரிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். மின் கேபிள் செல்லும் பாதையின் ஆய்வு, மற்றும் சேதமான கருவிகள், பல்புகளை மாற்றுவது போன்ற பணிகளில் தீவிரமாக கவனம் செலுத்தி வருகின்றனர்.

இதே போல சன்னிதானம் செல்லும் வழியில் நீர் விநியோகத்தை முறையாக தடையின்றி வழங்க பழுதுபார்க்கும் பணிகளில் நீர்வள ஆணையம் ஈடுபட்டுள்ளது.

மேலும் இந்த முறை சபரிமலைக்கு மகர விளக்கு சீசனில் தரிசனம் செய்ய வரும் லட்ச கணக்கான பக்தர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் தேவஸ்தானம் செய்து வருகிறது. இன்று ( 30-12-2022 ) மாலை 5 மணிக்கு திறக்கப்படும் நடை வரும் ஜனவரி 14 ஆம் தேதி மகரவிளக்கு பூஜை மற்றும் மகரஜோதி தரிசனத்தை தொடர்ந்து ஜனவரி 20 ஆம் தேதி வரை நடை திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று ( 30-12-2022 ) 32, 281 பேர் ஆன்லைன் மூலம் முன் பதிவு செய்துள்ளனர்.