கோவை தொழிற்சாலையில் ரூ.14 லட்சம் மதிப்புள்ள தாமிர கம்பிகள் திருடிய சிறுவன் உட்பட 9 பேர் கைது-துணை கமிஷனர் சிலம்பரசன் பேட்டியளித்த வீடியோ..!

கோவை: தொழிற்சாலையில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராக்களை செயல் இழக்கச் செய்துவிட்டு, அங்கிருந்த ரூ.14 லட்சம் மதிப்புள்ள தாமிர கம்பிகளை திருடிய 9 பேர் கைது செய்யப்பட்டனர்.
கோவை தெற்குப்பகுதி துணை கமிஷனர் சிலம்பரசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கோவை பீளமேடு பகுதியில் சக்கரவர்த்தி என்பவருக்கு சொந்தமான நிறுவனம் உள்ளது. இங்கு டிரான்ஸ்பார்மர் கருவிகள் தயார் செய்யப்படுகிறது. இந்த கருவிகளை தயாரிக்க பயன்படும் தாமிர கம்பிகள் தொழிற்சாலைக்குள் வைக்கப்பட்டு இருந்தது. கடந்த மாதம் 30-ந்தேதி ஒரு கும்பல் புகுந்து 1,440 கிலோ எடையுள்ள தாமிர கம்பிகளை திருடி ஒரு சரக்கு வேனில் ஏற்றி கொண்டு சென்றுவிட்டனர். இதன் மதிப்பு ரூ.14 லட்சம் ஆகும். இந்த திருட்டு குறித்து கோவை பீளமேடு போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீஸ் கமிஷனர் உத்தரவின்பேரில், துணை கமிஷனர் மேற்பார்வையில், உதவி கமிஷனர் பார்த்திபன், இன்ஸ்பெக்டர் கணேஷ் குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது.

தொழிற்சாலை வளாகத்தில் பொருத்தப்பட்டு இருந்த 2 கண்காணிப்பு கேமராக்களை செயல் இழக்க வைத்து திருட்டு ஆசாமிகள் இந்த கைவரிசையை காட்டி உள்ளனர். இதைத் தொடர்ந்து அந்த பகுதியில் உள்ள மற்ற கேமராக்கள் மூலம் குற்றவாளிகளின் உருவங்கள் பதிவாகியுள்ளதா; என்று ஆய்வு செய்யப்பட்டு, குற்றவாளிகள் தொடர்பான தகவல் கிடைத்தது.

பல்லடம் அருகே உள்ள சாமிகவுண்டன்பாளையத்தில் பழைய இரும்பு வியாபாரம செய்யும் ஜோதிலிங்கம்(வயது25) என்பவர் கைது செய்யப்பட்டார். இவர் தூத்துக்குடி மாவட்டம் புத்தன்தருவையை சேர்ந்தவர். இவர் இந்த தாமிர கம்பிகளை குறைந்த விலையில் குற்றவாளிகளிடம் இருந்து வாங்கி உள்ளார். அவரிடம் இருந்து ரூ.14 லட்சம் மதிப்புள்ள தாமிர கம்பிகள் முழுவதும் மீட்கப்பட்டது. இந்த திருட்டு குற்றத்தை நடத்திய 1.ஆனந்தகுமார்(27), அட்டப்பாடி, பாலக்காடு மாவட்டம், 2.அமீர் பாஷா(24) திருப்பூர், 3. சூர்யா(23) சத்தியமங்கலம், 4. பிரபு(22), பொள்ளாச்சி. 5.செந்தில்குமார்(32) ஒண்டிப்புதூர், 6. பிரகாஷ்(42) 9, மேட்டுப்பாளையம்.7. 17 வயது சிறுவன். ஒண்டிப்புதூர், 8. ஆனந்த்(25), காரமடை ஆகியோர் கைது செய்யப்பட்டனர். கைதான இரும்பு வியாபாரி ஜோதிலிங்கம் குற்றவாளிகளுக்கு ஆசை வார்தை கூறி, திருடி கொடுக்கும் பொருட்களை குறைந்த விலையில் வாங்கி அவர்களுக்கு பணம் கொடுத்து வந்துள்ளார். கைதான ஆனந்தகுமாருக்கு கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் 11 திருட்டு வழக்குகள் உள்ளன. ஆனந்த் என்பவருக்கு 3 திருட்டு வழக்குகள் உள்ளன.செந்தில்குமாருக்கு அடிதடி வழக்கு உள்ளது. கைதான 9 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.