தமிழ்நாட்டில் 6.18 கோடி வாக்காளர்கள்… இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு..!!

சென்னை: இறுதி வாக்காளர் பட்டியலை தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு இன்று வெளியிட்டார்.

நாடு முழுவதும் இன்னும் சில மாதங்களில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான முன்னேற்பாடுகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக மின்னணு இயந்திரங்களை சரிபார்த்தல், வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்தல், வாக்குச்சாவடிகளை தயார் செய்தல் ஆகிய பணிகள் நடைபெற்று வருகின்றன.

ஆண்டுதோறும் வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் நடைபெறும். இதில் வாக்காளர்கள் பெயர் சேர்த்தல், நீக்கம் மற்றும் முகவரி மாற்றம் ஆகியவை மேற்கொள்ளப்பட்டது. அந்த வகையில் வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிகள் கடந்த அக்டோபர் 27ம் தேதி தொடங்கியது. வரைவு வாக்காளர் பட்டியலும் அன்றே வெளியிடப்பட்டது. அன்று முதலே வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கவும், நீக்கம் செய்யவும் முகவரி மாற்றம் மற்றும் திருத்தவும் மனுக்கள் பெறப்பட்டன.

இந்நிலையில் மக்களவைத் தேர்தல் விரைவில் வரவுள்ள நிலையில், இறுதி வாக்காளர் பட்டியலை தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு இன்று வெளியிட்டார். வரைவு வாக்காளர் பட்டியலில் 6.11 கோடி வாக்காளர்கள் இருந்தனர். பின்னர், செய்தியாளர்களிடம் பேட்டி அளித்த சத்ய பிரதா சாகு; தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தலுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.

சென்னையில் உள்ள 16 தொகுதிகளில் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 39 லட்சம். தமிழ்நாட்டில் 6.18 கோடி வாக்காளர்கள் உள்ளனர். வேளச்சேரி சட்டமன்றத் தொகுதியில் 3,08,462 வாக்காளர்களும் உள்ளனர். தமிழ்நாட்டில் ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்கள் அதிகம் என்று கூறியுள்ளார். இந்நிலையில், திண்டுக்கல் மற்றும் விழுப்புரம் மாவட்டத்தில் இறுதி வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர்கள் வெளியிட்டனர்.

திண்டுக்கல் மாவட்டம்: திண்டுக்கல் மாவட்டத்தில் இறுதி வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் பூங்கொடி வெளியிட்டார். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளில் மொத்தம் 18,66,403 வாக்காளர்கள் உள்ளனர். ஆண் வாக்காளர்கள் 9 லட்சத்து 6,644 பேரும், பெண் வாக்காளர்கள் 9 லட்சத்து 59,538 பேரும் உள்ளனர்.

விழுப்புரம் மாவட்டம்: விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 7 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டார் மாவட்ட ஆட்சியர் பழனி. விழுப்புரம் மாவட்டத்தில் 7 சட்டமன்ற தொகுதிகளில் மொத்தம் 16,69,577 வாக்காளர்கள் உள்ளனர்.