நீலகிரியில் 5 இடங்களில் வெள்ளம் குறித்த மாதிரி ஒத்திகைப் பயிற்சி..!

ஊட்டி: தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் மற்றும் தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் இணைந்து செப்டம்பர் 1-ந் தேதி தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் வெள்ளத்தினால் பாதிக்கபட கூடிய 5 இடங்களில் அனைத்து துறைகளும் இணைந்து வெள்ளம் குறித்த மாதிரி ஒத்திகைப் பயிற்சியை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக, நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை மற்றும் வடகிழக்கு பருவமழை ஆகிய இரண்டு பருவகாலங்களில் வெள்ளத்தினால் அதிகளவில் பாதிக்கப்பட வாய்ப்புள்ள அபாயகரமான பகுதிகளாக கண்டறியப்பட்டது.
இதையடுத்து ஊட்டி முத்தோரை பாலாடா நஞ்சநாடு, குந்தா முள்ளிகூர், குன்னூர்
நகரம், கோத்தகிரி கன்னிகாதேவி காலனி, மேல் கூடலூர் ஆகிய 5 இடங்களில்
வெள்ளம் குறித்த மாதிரி ஒத்திகைப் பயிற்சியை நடத்த தேர்வு செய்யப்பட்டுள்ளது.
ஒத்திகை நிகழ்ச்சியில் முன் எச்சரிக்கை அறிவிப்பு, தேடுதல் மற்றும்
மீட்பு, பொதுமக்களை அப்புறப்படுத்துதல், தற்காலிக முகாம்களில் தங்க
வைத்தல், முதலுதவி மற்றும் மருத்துவ பரிசோதனை செய்தல் ஆகியவை குறித்து
வழக்கப்படும்.
மேலும், இயற்கை பேரிடர் ஏற்படும்போது மக்கள் தங்களை தாங்களாகவே எப்படி
பாதுகாத்து கொள்ள வேண்டும், வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து
பாதுகாப்பான இடத்திற்கு எவ்வாறு செல்வது, வெள்ளம் மற்றும் நிலச்சரிவில்
சிக்கிய நபர்களை எவ்வாறு மீட்பது என்பது குறித்து தீயணைப்பு மற்றும்
மீட்பு பணிகள் துறை, போலீசார், வருவாய்த்துறை, நெடுஞ்சாலைத்துறை.
உள்ளாட்சித் துறை மருத்துவ துறை போன்ற பல்வேறு துறைகள் இணைந்து இந்த
பேரிடர் ஒத்திகை நிகழ்ச்சி நடத்த அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு
வருகிறது.
நாளை மறுநாள் நடைபெறும் மாவட்ட அளவிலான மாதிரி ஒத்திகை பயிற்சியில்
அனைத்து துறை அலுவலர்களும், பொது மக்களும் மற்றும் முதல் நிலை
பொறுப்பாளர்களும் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கலெக்டர் அம்ரித்
தெரிவித்துள்ளார்.