தமிழ்நாட்டில் அந்நிய நேரடி முதலீடு 42% அதிகரிப்பு.!!

சென்னை : தமிழ்நாட்டில் திமுக அரசு ஆட்சி பொறுப்பேற்ற பிறகு கடந்த ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் அந்நிய நேரடி முதலீடு 41.5% அதிகரித்துள்ளது. இதே காலகட்டத்தில் 2020ம் ஆண்டு ரூ.12,504 கோடி முதலீடு தமிழகத்திற்கு கிடைத்துள்ள நிலையில், கடந்த ஆண்டு முதலீடு ரூ.17,896 கோடியாக அதிகரித்துள்ளது. இதில் 53% முதலீடுகள் அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான கால கட்டத்தில் கிடைத்துள்ளது.

இதன் மூலம் நாட்டின் ஒட்டு மொத்த அந்நிய நேரடி முதலீட்டில் தமிழ்நாட்டின் பங்களிப்பு 4ல் இருந்து 5%ஆக உயர்ந்து இருப்பதாக ஒன்றிய தொழில் மற்றும் வர்த்தக அமைச்சகத்தின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. மொத்த அந்நிய நேரடி முதலீட்டை ஈர்ப்பதில் இந்தியாவில் மராட்டியம், கர்நாடகா, குஜராத் மற்றும் டெல்லிக்கு அடுத்து 5வது இடத்தில் தமிழ்நாடு உள்ளது. கட்டுமானம், நிதிசேவை, ஆட்டோ மொபைல், எலக்ட்ரானிக்ஸ் போன்ற உற்பத்தி துறைகளில் முதலீடுகள் உயர்ந்துள்ளன.