கண்ணி வெடியில் சிக்கி 4 பயங்கரவாதிகள் பலி

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டம் கிருஷ்ணா கட் செக்டார் சர்வதேச எல்லை வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற 4 பாகிஸ்தான் பயங்கரவாதிகள், பாதுகாப்புப் படையினர் புதைத்து வைத்திருந்த கண்ணிவெடியில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.

பாகிஸ்தானில் இருந்து ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டம் கிருஷ்ணா கட் செக்டார் சர்வதேச எல்லை வழியாக 4 பயங்கரவாதிகள் இரகசியமாக இந்தியாவுக்குள் நுழைய முயன்றுள்ளனர். இரு நாட்டு எல்லைப் பகுதிகளில் பாதுகாப்புப் பலப்படுத்தும் நடவடிக்கையாகப் பாதுகாப்புப் படையினர் பல இடங்களில் கண்ணிவெடிகளைப் புதைத்து வைத்துள்ளனர். இந்நிலையில், ஊடுருவிய பயங்கரவாதிகள் எதிர்பாராதவிதமாக அந்தப் பகுதியில் புதைக்கப்பட்டிருந்த கண்ணிவெடியை மிதித்துள்ளனர்.

கண்ணிவெடி பயங்கரமாக வெடித்துச் சிதறியதில், ஊடுருவ முயன்ற 4 பயங்கரவாதிகளும் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர். உயிரிழந்த 4 பேரும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்புக் காஷ்மீரைச் சேர்ந்தவர்கள் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இவர்களில் முகமது பைசன் என்பவர் தடை செய்யப்பட்ட ‘லஷ்கர்-இ-தொய்பா’ அமைப்பின் முக்கியத் தளபதி ஆவார். மேலும் முகமது இஸ்திக், முகமது வாகஸ் மற்றும் முகமது ஆசிப் ஆகியோரும் கொல்லப்பட்டுள்ளனர். சம்பவத்தைத் தொடர்ந்து, அப்பகுதியில் பாதுகாப்புப் படையினர் தீவிரத் தேடுதல் வேட்டையும் சோதனையும் நடத்தி வருகின்றனர்.