கோவையில் பெண்களிடம் தொடர் வழிப்பறி, கொள்ளை நடத்திய சிறுவன் உள்பட 4 பேர் கைது -13 பவுன் நகைகள் பறிமுதல்..!

கோவை அருகே உள்ள தொண்டாமுத்தூர், வடவள்ளி பகுதியில் கடந்த சில மாதங்களாக ரோட்டில் நடந்து செல்லும் பெண்களிடமும், வாகனங்களில் செல்லும் பெண்களிடமும் நகை பறிப்பு சம்பவம் சங்கிலி தொடர் போல நடந்து வந்தது. இதை கண்டுபிடிக்க கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் உத்தரவின்பேரில் பேரூர் போலீஸ் துணை சூப்பிரண்டு ராஜபாண்டியன்,வடவள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் லெனின் அப்பாதுரை மற்றும் போலீசார் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. இவர்கள் வடவள்ளி. தொண்டாமுத்தூர், உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்த காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது தொடர்வழி கொள்ளையில் ஈடுபட்டது 4 பேர் கொண்ட கும்பல் என்பது தெரியவந்தது .இதையடுத்து அவர்கள் யார் எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து விசாரணை நடத்தினார்கள். தொடர்ந்து விசாரணை நடத்தியதில் தொடர் வழிப்பறியில் ஈடுபட்டது ஈரோடு மாவட்டம் பவானிசாகர் பழையம்பள்ளியைச் சேர்ந்த வாஞ்சிநாதன் ( வயது 20) நம்பியூர் புஞ்சை புளியம்பட்டியைச் சேர்ந்த விஜயராகவன் (வயது 19) குரும்பபாளையத்தைச் சேர்ந்த பச்சை என்கிற ஸ்ரீகாந்த் (வயது 20) மற்றும் 16 வயது சிறுவன் என்பது தெரியவந்தது .இதையடுத்து அவர்களை போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில் அவர்கள் 4 பேரும் சத்தியமங்கலத்தில் பதுங்கி இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது அங்கு விரைந்து சென்ற தனிப்படை போலீசார் ஒரு வீட்டில் பதுங்கி இருந்த வாஞ்சிநாதன், விஜயராகவன், ஸ்ரீகாந்த், மற்றும் 16 வயது சிறுவன் ஆகியோரை கைது செய்தனர். விசாரணையில் இவர்கள் ஈரோடு, சத்தியமங்கலம் உள்ளிட்ட இடங்களில் திருட்டு வழிப்பறி உள்பட பல்வேறு குற்றங்களுக்காக கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 4 பேரும் கடந்த 15 நாட்களுக்கு முன்பு தான் சிறையில் இருந்து வெளியே வந்துள்ளனர். தங்கள் மீது ஈரோட்டில் வழக்குகள் இருப்பதால் கோவைக்கு சென்று வழிப்பறியில் ஈடுபட முடிவு செய்தனர் .கோவை வந்து வடவள்ளி தொண்டாமுத்தூர் பகுதியில் வழிப்பறி திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்தது  தெரியவந்தது. இவர்களிடமிருந்து 13 பவுன் தங்க நகைகள் ,3 செல்போன்கள் மீட்கப்பட்டுள்ளன 4 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.தொடர் வழிப்பறிக் கொள்ளைகும்பலைதுரிதமாக கைது செய்த பேருர் டி .எஸ் .பி ராஜபாண்டியன்,,வடவள்ளி இன்ஸ்பெக்டர் லெனின் அப்பாதுரை உள்ளிட்ட தனிப்படையினரை போலீஸ் சூப்பிரண்டுபத்ரி நாராயணன் பாராட்டினார்..