பவானிசாகரில் வனவிலங்குகளை வேட்டையாடுவதற்காக சுருக்கு கம்பி வைத்த சிறுவன் உட்பட 4 பேர் கைது.!!

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் பவானிசாகர் வனச்சரகத்திற்கு உட்பட்ட கொத்தமங்கலம் வனப்பகுதி வரப்பள்ளம் சரகத்தில் வனச்சரக அலுவலர் சிவக்குமார் தலைமையில்  வனத்துறை ஊழியர்கள் தொடர்ந்து சென்றனர். அப்போது வனப்பகுதியில் சந்தேகத்திற்கிடமாக நான்கு பேர் சுற்றி திரிந்ததை கண்ட வனத்துறையினர் அவர்களை சுற்றி வளைத்து பிடித்தனர். அப்போது அவர்கள் வைத்திருந்த பையில் வனப்பகுதியில் உள்ள மான் உள்ளிட்ட வனவிலங்குகளை வேட்டையாடுவதற்காக பயன்படுத்தப்படும் சுருக்கு கம்பிகள் வைத்திருந்ததை பறிமுதல் செய்த வனத்துறையினர் அவர்களிடம் விசாரித்த போது பவானிசாகர் குடில் நகரை சேர்ந்த ஓதிச்சாமி (58), புதுக்குய்யனூரை சேர்ந்த கார்த்தி(26), கொத்தமங்கலம் இந்திராநகரை சேர்ந்த சுபாஷ் (36) மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய நான்கு பேர் என்பது தெரிய வந்தது. இதையடுத்து வனத்துறையினர் நான்கு பேர் மீது வன குற்ற வழக்கு பதிந்து மூன்று பேரை சத்தியமங்கலம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கிளை சிறையில் அடைத்தனர். 17 வயது மைனர் சிறுவனை ஈரோடு சிறுவர் சீர்திருத்த குழுமத்தின் முன்பு ஆஜர்படுத்தி கோவை சிறார் கூர்நோக்கு இல்லத்தில் ஒப்படைத்தனர்.