அமெரிக்காவில் சட்டவிரோதமாகத் தங்கி, லாரிகளை ஓட்டி வந்த சுமார் 30 இந்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் விரைவில் நாடு கடத்தப்பட்டு தாய் நாட்டிற்கு அனுப்ப உள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்க சுங்க மற்றும் எல்லைப் பாதுகாப்புத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, மே 11 முதல் 15 வரை அரிசோனா மாநிலத்தில் உள்ள யுமா பகுதியில் ‘ஆபரேஷன் செக்மேட்’ என்ற சிறப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதில் மொத்தம் 52 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் 36 பேர் லாரிகளை (semi-trucks) ஓட்டி வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.இந்த 36 லாரி ஓட்டுநர்களில் 30 பேர் இந்தியர்கள். மீதமுள்ள ஆறு பேர் மெக்சிகோ, எல் சால்வடார் மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள். இவர்கள் கலிபோர்னியா, நியூயார்க், வாஷிங்டன் மற்றும் விர்ஜீனியா உள்ளிட்ட மாநிலங்களில் வணிக ஓட்டுநர் உரிமம் பெற்றிருந்தனர். சிலரிடம் எந்த ஓட்டுநர் உரிமமும் இல்லை. கைது செய்யப்பட்டவர்களில் பெரும்பாலானோர் வேலை அனுமதி ஆவணங்களை வைத்திருந்தனர். ஆனால் அந்த ஆவணங்கள் முந்தைய நிர்வாக காலத்தில் வழங்கப்பட்டவை என்றும் தற்போது அவற்றின் செல்லுபடியாகும் காலம் முடிவடைந்துவிட்டதாகவும் அமெரிக்க அதிகாரிகள் கூறியுள்ளனர். இதன் காரணமாக அவர்கள் சட்டப்பூர்வமாக வேலை செய்யும் தகுதியை இழந்த நிலையில் இருந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த இந்தியர்களில் பெரும்பாலானோர் ஜோ பைடன் ஆட்சியின் போது பெற்ற வேலை அனுமதி ஆவணங்களை வைத்திருந்தனர். ஆனால் இந்த ஆவணங்கள் தற்போது செல்லாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க கூட்டாட்சி சட்டப்படி அனைவரும் விசாரணைக்குப் பின் நாடு கடத்தப்பட உள்ளனர்.
அமெரிக்காவில் தினசரி பொருட்கள் விநியோகம், தொழிற்சாலை சரக்குகள் மற்றும் மாநிலங்களுக்கு இடையேயான போக்குவரத்து பெரும்பாலும் கனரக டிரக் சேவைகளையே சார்ந்துள்ளது. இத்தகைய முக்கிய துறையில் சட்டவிரோதமாக தங்கி பணிபுரிபவர்கள் இருப்பது பொதுமக்கள் பாதுகாப்புக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என அமெரிக்க அரசு கருதுகிறது. இதன் காரணமாகவே “ஆபரேஷன் செக்மேட்” நடவடிக்கை தொடங்கப்பட்டதாக அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். சட்டவிரோத குடியேற்ற விதிமுறைகளை மீறி வணிக வாகனங்களை இயக்குபவர்களை கண்டறிந்து கைது செய்வதே இந்த நடவடிக்கையின் முக்கிய நோக்கமாகும். கைது செய்யப்பட்ட அனைத்து நபர்களும் அமெரிக்க கூட்டாட்சி சட்டங்களின் கீழ் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும், அதன்பின் அவர்களை சொந்த நாடுகளுக்கு நாடு கடத்தும் நடைமுறைகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவில் குடியேற்றக் கட்டுப்பாடுகள் மீண்டும் கடுமையடைந்து வரும் சூழலில், சட்டபூர்வ ஆவணங்களின் செல்லுபடியாகும் நிலையை தொடர்ந்து பராமரிப்பது வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு மிக முக்கியமானதாக மாறியுள்ளது.








