கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்தியவருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை – கோவை நீதிமன்றம் தீர்ப்பு..!

கோவையில் இருந்து கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதை தடுக்க குடிமை பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 2008 ம் ஆண்டு பொள்ளாச்சி குடிமை பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை போலீசார் கோவை – பாலக்காடு சாலையில் வாகன சோதனை நடத்தினர். அப்பொழுது அந்த வழியாக வந்த ஒரு லாரியை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அதில் கேரளாவுக்கு கடத்திச் செல்வதற்காக 12 மூட்டைகளில் 6 டன் ரேஷன் அரிசி பதுக்கி வைத்து இருந்தது தெரியவந்தது. இது தொடர்பாக கோவை சிவானந்தா காலனி சேர்ந்த அன்வர் பாஷா, உக்கடம் அண்ணாநகரை சேர்ந்த அலிப் ராஜா ஆகிய இருவரை கைது செய்தனர். இதனிடையே ரேஷன் அரிசி கடத்தல் தொடர்பான வழக்கு கோவை 4 வது நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சரவணபாபு ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட அன்வர் பாஷாவிற்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூபாய் 30,000 அபராதமும் விதித்து உத்தரவிட்டார். மேலும் அலீப் ராஜாவை வழக்கில் இருந்து விடுவித்து உத்தரவிட்டார். அரசு தரப்பில் பிரசன்ன வெங்கடேஷ் ஆஜராகி வாதாடினார். இதில் அன்வர் பாஷா மீது ரேஷன் அரிசி கடத்தல் தொடர்பாக கோவை உள்பட 8 மாவட்டங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்..