3 வந்தே பாரத் ரயில்களில் 100 சதவீதம் தாண்டிய முன்பதிவு – ரயில்வே துறை தகவல்..!

தெற்கு ரயில்வேயில் இயக்கப்படும் சென்னை – கோவை உட்பட மூன்று வந்தே பாரத் ரயில்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்த ரயில்களில் டிக்கெட் முன்பதிவு, 100 சதவீதத்துக்கு மேல் உள்ளது என, தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

சென்னை சென்ட்ரல் – மைசூரு, சென்னை சென்ட்ரல் – கோவை, கேரளா காசர்கோடு – திருவனந்தபுரம் இடையே, வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன.

சென்னை சென்ட்ரல் – கோவை இடையே கடந்த ஏப்ரல் மாதம் சேவை துவங்கியது. இந்த ரயிலில், 7 ‘ஏசி’ சேர் கார் பெட்டிகளும், ஒரு ‘எக்ஸிகியூட்டிவ்’ பெட்டி என மொத்தம் எட்டு பெட்டிகளில், 596 இடங்கள் உள்ளன.

இந்த ரயிலில் எக்ஸிகியூட்டிவ் பெட்டியில் முன்பதிவு , 108.91 சதவீதம்; சேர் கார் பெட்டிகளில் 109.51 சதவீதமாகவும் உள்ளது.

இது குறித்து தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறும் போது:

பயணியரிடம் கோரிக்கையை ஏற்று, அதிகாரிகள் சில வழித் தடங்களை ஆய்வு செய்து வருகின்றனர். சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு வந்தே பாரத் ரயில் இயக்குவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டு உள்ளது. ரயில்வே வாரியம் ஒப்புதல் கிடைத்தவுடன், கூடுதல் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படும். என்று கூறினர்..