கோவையில் கஞ்சா விற்ற 3 பேர் கைது- 12 கிலோ கஞ்சா, ரூ. 25 ஆயிரம் பறிமுதல்..!!

கோவை கருமத்தம்பட்டி தனிப்படை போலீசாருக்கு சோமனூர் ரெயில்வே கேட் பகுதியில் கஞ்சா விற்பதாக இன்று காலை ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்து சென்று சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு 3 வாலிபர்கள் சந்தேகத்திற்கிடமாக நின்று இருந்தனர். அவர்களை போலீசார் விரைந்து சென்று மடக்கி பிடித்தனர். பின்னர் அவர்களை போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் சூலூர் முதலிப்பாளையத்தைச் சேர்ந்த முருகன் (வயது 40),சென்னையை சேர்ந்த சபி முகமது (38),ஒடிசாவை சேர்ந்த தி பின் பிர்க் (28) என்பது தெரிய வந்தது. மேலும் விசாரணையில் அவர்கள் கஞ்சாவை ஆந்திராவிலிருந்து வாங்கி வந்து கோவையில் விற்பனை செய்வதற்காக 3 பேரும் பங்கு பிரித்துக் கொண்டிருந்ததும், முருகன் என்பவர் மீது கஞ்சா விற்பனை சம்பந்தமாக பல்வேறு வழக்குகள் உள்ளதும், அவர் ஏற்கனவே குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையிலிருந்து வந்தவர் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் 3 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்த 12 கிலோ கஞ்சா மற்றும் ரூ.25 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர்.