தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் 2-ம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்..!

தூத்துக்குடி: வங்கக் கடலில் உருவாகியுள்ள புயலை தொடர்ந்து தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் நேற்று 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்படடது.

தூத்துக்குடி பகுதியில் நேற்று பிற்பகலில் திடீரென பலத்த சூறாவளி காற்று வீசியது. இதனால் வாகன ஓட்டிகள் கடுமையாக திண்டாடினர்.

வங்கக்கடலில் உருவாகி உள்ள மொக்கா புயல், போர்ட் பிளேயரில் இருந்து சுமார் 510 கிலோ மீட்டர் மேற்கு, தென்மேற்கு திசையில் நிலை கொண்டுள்ளது. இதனால் தமிழகத்தில் சில மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதே போன்று கடலில் பலத்த சூறாவளி காற்று வீசும் என்பதால், ஆழ்கடல் மீன்பிடித்தலுக்கு சென்றுள்ள மீனவர்கள் விரைவாக கரைக்கு திரும்ப வேண்டும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று வங்கக்கடலில் புயல் உருவாகி இருப்பதை தூத்துக்குடி வஉசி துறைமுகத்துக்கு வரும் கப்பல்களுக்கு அறிவிக்கும் வகையில் நேற்று முன்தினம் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. மொக்கா புயல் தீவிர புயலாக மாறியதால் வஉசி துறைமுகத்தில் நேற்று 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.

மொக்கா புயல் காரணமாக தமிழகத்தில் சில நாட்கள் வெப்பநிலை அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. அதன்படி தூத்துக்குடியில் நேற்று பகலில் வெப்ப நிலை அதிகரித்து காணப்பட்டது. பிற்பகல் 3 மணி வரை கடுமையான வெயில் மக்களை வாட்டி வதைத்தது. மக்கள் வெளியே வர முடியாமல் வீடுகளுக்கு உள்ளேயே முடங்கும் நிலை ஏற்பட்டது.

தூத்துக்குடி- பாளையங்கோட்டை சாலையில் புழுதியுடன் பலத்த சூறாவளி காற்று வீசியதால்
மேம்பாலத்துக்கு அடியில் பாதுகாப்பாக ஒதுங்கி நின்ற இருச்சக்கர வாகன ஓட்டிகள்.

பிற்பகல் 3 மணிக்கு மேல் வானிலையில் திடீரென மாற்றம் ஏற்பட்டு, திடீரென பலத்த சூறாவளி காற்று வீசியது. குறிப்பாக தூத்துக்குடி நகருக்கு வெளியே பாளையங்கோட்டை சாலை பகுதியில் புழுதியுடன் எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவுக்கு புழுதிக்காற்று வீசியது. வாகனங்களில் சென்றவர்கள் கடுமையாக திண்டாடினர். இரு சக்கர வாகன ஓட்டிகள் வாகனங்களை இயக்க முடியாமல் ஆங்காங்கே நிறுத்தினர்.

புறவழிச்சாலை மேம்பாலத்துக்கு அடியில் பலர் தங்களது வாகனங்களை நிறுத்தி பலத்த காற்று ஓயும் வரை காத்திருந்தனர். இந்த சூறாவளிக் காற்று சுமார் 30 நிமிடங்கள் வரை நீடித்தது. அதன் பிறகு காற்று ஓய்ந்து சகஜ நிலை காணப்பட்டது. இந்த திடீர் காற்று காரணமாக சில இடங்களில் மின் தடையும் ஏற்பட்டது.

மேலும், மாலை 3 மணிக்கு மேல் வானில் கருமேகக் கூட்டங்கள் திரண்டு வந்து வெயிலை விரட்டியடித்தன. புதுக்கோட்டை சுற்றுவட்டார பகுதிகளில் இடி மின்னலுடன் பரவலான மழை பெய்தது. மாநகரப் பகுதியில் மழை ஏதும் பெய்யவில்லை. கருமேகங்கள் சூழந்து காணப்பட்டதால் வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பித்த மக்கள் நிம்மதி அடைந்தனர்.