பெங்களூரு: பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் புதிதாக ரூ.5 ஆயிரம் கோடியில் அமைக்கப்பட்டு உள்ள 2வது முனையத்தின் அழகு, பிரமிக்க வைக்கிறது.
கர்நாடகா அரசின் சார்பில் பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலைய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள 108 அடி உயர கெம்பேகவுடா சிலை திறப்பு விழா, இந்த விமான நிலையத்தில் ரூ.5 ஆயிரம் கோடியில் கட்ட்பபட்டுள்ள புதிய 2வது முனையத்தை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் விழா, விமான நிலைய வளாகத்தில் கெம்பேகவுடா பெயரில் தீம் பார்க் அமைப்பதற்காக அடிக்கல் நாட்டு விழா ஆகியவற்றில் பிரதமர் மோடி நாளை கலந்து கொள்கிறார்.
இதற்காக தனி விமானத்தில் வரும் அவர், கேஎஸ்ஆர் ரயில் நிலையத்தில் நடக்கும் விழாவில் முதலில் கலந்து கொள்கிறார். அதில், மைசூரு-பெங்களூரு-சென்னை இடையிலான வந்தே பாரத் சூப்பர் பாஸ்ட் ரயில் சேவையை தொடங்கி வைக்கிறார். பின்னர், பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்துக்கு வரும் அவர், 2வது விமான முனையத்தை திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். அதைத்தொடர்ந்து, இந்த விமான நிலைய வளாகத்தில் கர்நாடகா அரசு அமைத்துள்ள கெம்பேகவுடாவின் 108 அடி உயர சிலையை திறந்து வைத்து, தீம் பார்க் அமைப்பதற்கான அடிக்கல்லை நாட்டுகிறார். இதற்கான ஏற்பாடுகள் பிரமாண்டமாக செய்யப்பட்டுள்ளது. மேலும், மோடியின் பாதுகாப்புக்கு பல ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.
கெம்பேகவுடா விமான நிலையத்தின் 2வது முனையம் திறக்கப்பட்டால், தற்போது ஆண்டுக்கு 2.5 கோடி பயணிகளை கையாண்டு வரும் பெங்களூரு விமான நிலையத்தின் திறன் 5.6 கோடியாக அதிகரிக்கும். 2வது முனையம் முழுவதும் பெரிய தோட்டத்தை போல் பசுமையாக அமைக்கப்பட்டு உள்ளது. உள்நாட்டு தொழில்நுட்பத்தில் தொங்கும் தோட்டங்கள், பூங்காக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இவற்றை பார்க்கும் மக்கள், பிரமாண்ட பூங்காவில் உலவச் சென்றது போன்ற உணர்வு ஏற்படுவதாக தெரிவித்துள்ளனர். மேலும், பார்க்கும் இடமெல்லாம் கண்ணாடிகளாக பளபளப்பாக கண்ணை பறிக்கும் வகையில் மின்னுகிறது.
2வது விமான முனையம், கெம்பேகவுடாவின் 108 அடி சிலை திறப்பு விழாவுக்கு பெங்களூரு புறநகரை சேர்ந்த அனைத்து கல்வி நிறுவனங்களும் மாணவர்களை அழைத்து வரும்படி கர்நாடகா கல்வித்துறை உத்தரவிட்டு இருந்தது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், நேற்று இந்த உத்தரவு ரத்து செய்யப்பட்டது.
Leave a Reply