2024 தேர்தல் : மீண்டும் கோவையில் போட்டியிடுவேன்- கமல்ஹாசன்..!

தமிழ்நாட்டில் கடந்த 2019ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் கோயம்புத்தூரில் தோல்வியடைந்த நடிகர் கமலஹாசன், தற்போது மீண்டும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட போவதாக தெரிவித்துள்ளார்.

தமிழ் திரை உலகின் உச்சபட்ச நட்சத்திரமாக திகழ்பவர் நடிகர் கமலஹாசன். 50 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் திரை உலகின் அசைக்க முடியாத நடிகராக வலம்வந்து கொண்டிருக்கிறார். இந்த நிலையில் கடந்த சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு மக்கள் நீதி மய்யம் என்ற அரசியல் கட்சியை தொடங்கி தேர்தல் களம் கண்டார்.

கோயம்புத்தூரில் போட்டியிட்ட நடிகர் கமலஹாசனை அதிமுக கூட்டணியின் இடம் பெற்றிருந்த வானதி சீனிவாசன் தோற்கடித்தார். இந்த நிலையில் நாடாளுமன்றத் தேர்தலில் மீண்டும் கோவையில் போட்டியிட போவதாக அறிவித்திருக்கிறார்.

கோவையில் தனியார் ஹோட்டலில் நடைபெற்ற கோவை மண்டல மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய கமலஹாசன் கூறியது, சட்டமன்றத் தேர்தலை விட தற்போது கோயம்புத்தூரில் எனக்கு ஆதரவு பெருகி இருப்பது தெரிகிறது. இதனால் மீண்டும் வரக்கூடிய நாடாளுமன்ற பொது தேர்தலில் கோயம்புத்தூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட உள்ளேன். அதற்காக தற்போதோ நிர்வாகிகள் பணிகளை தொடங்க வேண்டும்.விக்ரம் படத்திற்கு கூட்டம் வரும் பொழுது, மக்கள் நீதி மய்யத்திற்கு கூட்டம் வராதா என்று பேசினார்.

அதே நேரம் இது குறித்து மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகளிடம் விசாரிக்கும் பொழுது, வரக்கூடிய நாடாளுமன்ற பொது தேர்தலில் மக்கள் நீதி மய்யம் திமுகவுடன் கூட்டணி அமைக்க அதிக வாய்ப்பு இருக்கிறது. மக்கள் நீதி மய்யம் தனித்தே பெரும்பான்மையான ஓட்டுகளை பெற்றது. திமுகவுடன் கூட்டணி என்றால் கண்டிப்பாக கோயமுத்தூர் தொகுதியில் கமலஹாசன் வெற்றி பெறுவார். நாடாளுமன்றம் செல்வது உறுதி என்று கூறினார்.