நீலகிரியில் பாரம்பரிய உடை அணிந்து கோவில் திருவிழாவை கொண்டாடிய பழங்குடின மக்கள்..!

நீலகிரி மலைப்பகுதியில் கோத்தர், தோடர், பணியர், குரும்பர், காட்டுநாயக்கர், இருளர் என 6 இனங்களைச் சேர்ந்த பண்டைய பழங்குடினர் வசித்து வருகின்றனர்.
கோக்கால் என்பது கோத்தர் குடியிருப்பின் பெயர். இந்தியாவிலேயே சோலூர், திருச்சுக்கடி, கொல்லிமலை, குந்தா கோத்தகிரி, மேல் கூடலூர், கோத்தகிரி, கீழ் கோத்தகிரி என 7 இடங்களில் மட்டுமே இவர்களின் சமுதாயத்தினர் வாழ்ந்து வருகின்றனர்.
எருமை மேய்த்தல், இரும்புப் பொருட்கள் மற்றும் மண்பாண்டங்கள் செய்தல், விவசாயம் ஆகியவை இவர்களின் தொழில். ஆரம்பத்தில் பாரம்பரிய சிறுதானியங்களான ராகி, சாமை, தினை, கம்பு போன்றவற்றை விளைவித்தனர் இப்போது கேரட், பீட்ரூட், உருளைக்கிழங்கு பயிரிட்டு வருகின்றனர்..இவர்கள் கடவுள் நம்பிக்கை, பாரம்பரியத்தை விட்டுக் கொடுக்கவில்லை. பெண்கள் மண்டூ செடியை தலையில் சூடிக்கொண்டு, துபிட்டி எனும் வெள்ளை புடவையை அணிந்து கொள்வதும், ஆண்கள் வேட்டி கட்டிக் கொண்டு வராடு என்கிற துணியை போர்த்திக் கொள்வதும்தான் இவர்களின் உடைக் கலாசாரம்.
ஐனூர், அம்மனூர் தான் இவர்களின் குல தெய்வம்.இந்த நிலையில் ஆண்டுதோறும் ஜனவரி மாதத்தில் 7 கோக்கால்களிலும் ஐனூர், அம்மனூர் கோவில் திருவிழா கோலாகலமாக நடக்கும். அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா சோலூர் ஊராட்சிக்கு உட்பட்ட கோக்கால் கிராமத்தில் கோலகலமாக தொடங்கியது.
பாரம்பரிய சிறப்புடன் தொடங்கிய இந்த திருவிழாவில் திரளான கோத்தர் இன மக்கள் கலந்து கொண்டு தங்களின் பாரம்பரிய உடை அணிந்து ஆடி பாடி திருவிழாவை கொண்டாடினர். இதில் திரளானோர் கலந்து கொண்டனர்.