ஊட்டியில் உயிருடன் மண்ணில் புதைந்து 2 தொழிலாளர்கள் பலி- வீட்டின் உரிமையாளர், ஒப்பந்ததரார் மீது போலீஸ் வழக்குபதிவு..!

ஊட்டி:
சென்னையை சோ்ந்த குமரேசன் என்பவருக்கு உதகையில் மஞ்சனக்கொரை குந்தா ஹவுஸ் பகுதியில் சொந்த இடம் உள்ளது.

இவா், அந்த இடத்தில் வீடு கட்டுவதற்கான பணிகளை தனியாா் ஒப்பந்ததாரா் அா்ஷத்திடம் அளித்திருந்தாா். இவரது அறிவுறுத்தலின்படி வீடுகட்டும் பணியில் 10 தொழிலாளா்கள் ஈடுபட்டிருந்தனா். கடந்த ஒரு மாதமாக பணிகள் நடைபெற்று வருகிறது. வீட்டின் அருகே தடுப்புச் சுவா் கட்டுவதற்காக பள்ளம் தோண்டும் பணிகள் நடந்தது. அந்த பணியில் சேலம் மாவட்டம், ஓமலூரை அடுத்த மாரக்கவுண்டன்புதூா் பகுதியை சோ்ந்த சேட்டு(54), வேலு(28) உள்பட 4 பேர் ஈடுபட்டிருந்தனா். அப்போது, திடீரென மண் சரிவு ஏற்பட்டது.

இதில், சேட்டு, வேலு ஆகியோா் மீது மண் விழுந்து மூடியதால், இருவரும் நிலத்திற்குள் புதைந்தனா்.இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து 2 பேரின் உடல்களை மீட்டு ஊட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து அறிந்த மாவட்ட கலெக்டர் அம்ரித், சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தாா். இதுகுறித்து அவா் கூறுகையில், தடுப்புச் சுவருக்காக பள்ளம் தோண்டும் பணிகள் போதிய பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாமல் நடைபெற்றுள்ளன.

இதுகுறித்து விசாரிக்க ஆா்.டி.ஓ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. முதல் தகவல் அறிக்கை பதிவுசெய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா். அதன்படி ஆர்.டி.ஓ.தனது விசாரணையை தொடங்கினார். மேலும் போதிய பாதுகாப்பு இல்லாமல் பணிகள் நடந்ததால், நிலத்தின் உரிமையாளர், மற்றும் ஒப்பந்ததரார் ஆகிய 2 பேர் மீது ஊட்டி நகர போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.