ஒரே அறையில் அருகருகே 2 கழிப்பிடங்கள் – கூடலூர் பொதுமக்கள் கடும் எதிர்ப்பு..!

கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட அம்மன்குளம் பகுதியில் சமீபத்தில் ஒரே அறைக்குள் 2 கழிப்பிடங்கள் கட்டப்பட்டு இருந்தது. இது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவிக்கவே உடனடியாக அந்த கழிப்பிடங்களை மாநகராட்சி நிர்வாகம் மாற்றி அமைத்தது. இந்த சர்ச்சை ஓய்வதற்குள் இதேபோன்ற ஒரு சம்பவம் நீலகிரி மாவட்டத்திலும் தற்போது நிகழ்ந்துள்ளது. அதுபற்றிய விவரம் வருமாறு:- நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே நெல்லியாளம் நகராட்சிக்கு உட்பட்ட தேவாலா பஜாரில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகே பொது கழிப்பறை ஒன்று பராமரிப்பு இல்லாமல் கிடந்தது. தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள், மாணவ-மாணவிகள் வந்து செல்லும் இடம் என்பதால் அந்த பொது கழிப்பறையை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர்.
அதன்பேரில் நெல்லியாளம் நகராட்சி சார்பில் கழிப்பறையை சீரமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக மத்திய அரசின் நவீன கழிவறை திட்டத்தின் கீழ் ரூ.6 லட்சம் ஒதுக்கப்பட்டது. கழிப்பறை பணிகள் முடிந்து பயன்பாட்டுக்கு தயாராக இருந்தது. பணி முடிந்ததால் அந்த பகுதியினர் ஆர்வத்துடன் கழிப்பறையை காண சென்றனர். அங்கு அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ஒரே அறையில் 2 பேர் அமரும் வகையில் கழிப்பிடம் அமைக்கப்பட்டிருந்தது. கதவு எதுவும் இன்றி 2 கழிப்பிடத்துக்கு மத்தியில் சிறு தடுப்புச்சுவர் மட்டும் அமைக்கப்பட்டு உள்ளது. இதனை சிலர் செல்போனில் படம் பிடித்தனர். அந்த புகைப்படம் தற்போது வைரலாக பரவி வருகிறது. முறையான திட்டமிடுதல் இன்றி மத்திய அரசின் பணம் வீணடிக்கப்பட்டு உள்ளதாக பல்வேறு தரப்பினரும் குற்றம்சாட்டி உள்ளனர். ஒரே இடத்தில் 2 கழிப்பிடம் கட்டிய காண்டிராக்டர் மற்றும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தி உள்ளனர். எதிர்ப்பு காரணமாக கழிப்பிடத்தை மாற்றி அமைக்கும் முயற்சியில் நெல்லியாளம் நகராட்சி ஈடுபட்டு உள்ளது.