சிறுமி உட்பட 2 பேருக்கு டெங்கு காய்ச்சல் – பீதியில் கோவை மக்கள்..

கோவை அடுத்த அன்னூர் அருகே மசக்கவுண்டன் செட்டிபாளையம் ஊராட்சி குருக்கம்பாளையம் பகுதியில் 31 வயது நபருக்கு கடந்த சில நாட்களாக காய்ச்சல் இருந்து வந்தது. உடனே அவர் கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்கள் நடத்திய பரிசோதனையில் அவருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதியானது.

இதேபோன்று கஞ்சப்பள்ளி சர்ச் தெருவை சேர்ந்த ஐந்து வயது சிறுமிக்கும் தொடர்ந்து காய்ச்சல் இருந்தது. உடனே அவரை போகலூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு பெற்றோர் அழைத்துச் சென்றனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்த போது சிறுமிக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதியானது. இதனால் அவர்கள் இரண்டு பேரும் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதை அடுத்து சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகத்தினர் மற்றும் சுகாதாரத் துறையினர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் வீடு உள்ள பகுதிகளில் கொசு மருந்து தெளித்தனர். மேலும் அவர்கள் பிளீச்சிங் பவுடர் தூவுதல் உள்பட டெங்கு காய்ச்சல் தடுப்பு பணிகளில் ஈடுபட்டனர். இரண்டு பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதியாகி உள்ளதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். எனவே சுகாதாரப் பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.