ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் இந்தியத் தலைவர் உட்பட 2 பேர் கைது.!

ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் இந்திய தலைவர் உட்பட பயங்கரவாத பின்னணி கொண்ட இரு நபர்கள் அசாம் மாநிலத்தில் இன்று அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.

மக்களவைத் தேர்தலுக்கு தேசம் பரபரப்பாக தயாராகி வருகிறது. உலகின் மாபெரும் ஜனநாயகத் திருவிழாவாக பார்க்கப்படும் இந்தியாவின் பொதுத்தேர்தல் சூழலை சீர்குலைக்கும் நோக்கத்தில் பயங்கரவாதிகளும் பரபரப்பாக நாசகர திட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்காக அண்டை நாடுகளில் பயிற்சி பெற்று இந்தியாவுக்குள் ஊடுருவும் இந்த நபர்களை வளைக்க எல்லை மாநிலங்களின் போலீஸார் முதல் தேசிய பாதுகாப்பு முகமையான என்ஐஏ வரை காத்திருக்கின்றன.

இந்த வகையில் அண்டை நாடான வங்கதேசத்தில் இருந்து அசாமின் துப்ரியில் சட்டவிரோதமாக நுழைந்த இரு பயங்கரவாதிகள் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர். தேசிய புலனாய்வு அமைப்பின் ‘தேடப்படுவோர்’ பட்டியலில் இடம்பெற்றிருக்கும் இந்த இருவரும், பயங்கரவாத அமைப்பான ஐஎஸ்ஐஎஸ் தொடர்பானவர்கள். ஐஎஸ்ஐஎஸ் இந்திய தலைவரான ஹரிஸ் ஃபரூக்கி மற்றும் அவரது சகாவான ரெஹான் ஆகியோர் இந்த வகையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பாதுகாப்பு ஏஜென்சிகளுக்கு கிடைத்த ரகசியத் தகவலை அடுத்து, அசாம் காவல்துறையின் சிறப்பு அதிரடிப்படை வங்காளதேசத்தை ஒட்டிய சர்வதேச எல்லை நெடுக தீவிர வேட்டையில் ஈடுபட்டது.

அதிரடிப்படை இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி மஹந்தா தலைமையிலான சிறப்பு அதிரடிப்படையினர் நடத்திய தேடுதலில் துப்ரியில் உள்ள தர்மசாலா பகுதியில் எல்லை தாண்டி பதுங்கியிருந்த இரு பயங்கரவாதிகளும் இன்று கைது செய்யப்பட்டனர்.

இந்தியா முழுவதும் பல இடங்களில் நாசவேலை, பயங்கரவாதச் செயல்களுக்கான சதித்திட்டங்கள், நிதி சேகரிப்பு மற்றும் ஆட்களை அமர்த்துதல் ஆகியவற்றில் இந்திய ஐஎஸ்ஐஎஸ் அமைப்பினர் மேற்கொண்டிருந்தனர். இவர்களுக்கு எதிராக என்ஐஏ, டெல்லி காவல்துறை மற்றும் லக்னோ ஏடிஎஸ் ஆகியவை பல்வேறு நிலுவை வழக்குகளுடன் காத்திருக்கின்றன.

கைது செய்யப்பட்ட பயங்கரவாதிகள் இருவரையும் என்ஐஏ வசம் அசாம் சிறப்பு அதிரடிப்படை மேல் விசாரணைக்காக ஒப்படைக்க உள்ளது.