நள்ளிரவில் உணவகத்தின் கூரையை பிரித்து பணம் திருடும் 2 முகமூடி பெண்கள்..!

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி – வேலூர் நெடுஞ்சாலையில் அசைவ உணவகம் ஒன்று இயங்கி வருகிறது. இந்த உணவகத்தில் 10க்கும் மேற்பட்ட ஆண் மற்றும் பெண் ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று இரவு 10.30 மணி அளவில் உணவக உரிமையாளர் மற்றும் ஊழியர்கள் பணி முடிந்ததும் உணவகத்தை பூட்டிவிட்டு சென்று விட்டனர்.

இதையடுத்து வழக்கம்போல் நேற்று  காலை உணவக உரிமையாளர் உணவகத்தை திறந்து பார்த்த போது கல்லாப்பெட்டியை கண்டு அதிர்ச்சி அடைந்தார். கல்லாவில் வைத்திருந்த பணம் மொத்தமாக திருடப்பட்டு இருந்தது. இதனைத் தொடர்ந்து உடனடியாக ஆரணி கிராமிய காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி ஆரணி கிராமிய காவல் துறையினர் உணவகத்தில் உள்ள சிசிடிவி கேமராவை பார்த்தபோது நள்ளிரவு 1 மணி அளவில் இரண்டு பெண்கள் சுடிதார் மீது கோட் மற்றும் முகமூடி அணிந்து கூரையை பிரித்துக் கொண்டு உணவகத்திற்கு உள்ளே இறங்கி கல்லாப் பெட்டியை திறந்து அதிலிருந்து சுமார் 4,000 ரூபாய் பணத்தை திருடுவது பதிவாகியுள்ளது.

பின்னர் காவல்துறையினர் உணவகத்தின் சிசிடிவி பதிவை வைத்து 2 பெண் குற்றவாளிகளைத் தீவிரமாக தேடி வருகின்றனர். ஆரணி பகுதியில் நள்ளிரவில் 2 பெண்கள் உணவகத்தின் கூரையை பிரித்துக் கொண்டு உள்ளே இறங்கி திருடும் சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பொதுமக்கள், வியாபாரிகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.