பல்லடத்தில் 4 பேர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளிகள் 2 பேர் திருப்பூர் போலீஸ் நிலையத்தில் சரண்.!!

கோவை : திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள கள்ளக் கிணறு, குறைத்தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் பழனிச்சாமி. அவரது மகன் மோகன்ராஜ் ( வயது 49) பாஜக கிளைத் தலைவர். கடந்த 3-ந் தேதி இரவு அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் குடிபோதையில் வந்த 3 பேர் கொண்ட கும்பல் மோகன்ராஜ் அவரது அண்ணன் செந்தில்குமார் (வயது 47) அவரது தாயார் புஷ்பவதி (வயது 69) சித்தி ரத்தினம்மாள் (வயது 58 )ஆகியோரை அரிவாளால் வெட்டி படுகொலை செய்தது. இந்த கொடூர செயலில் ஈடுபட்ட 3 பேரில் திருச்சி மணப்பாறையை சேர்ந்த செல்லமுத்து ( வயது 24) மட்டும் போலீசாரிடம் சிக்கினார். அவனை போலீசார் கைது செய்தனர். அவரை போலீசார் ஆயுதங்களை எடுத்து கொடுக்க அழைத்துச் சென்ற போது போலீஸ் பிடியில் இருந்து தப்பி ஓட முயன்றார். அப்போது தவறி விழுந்து அவரது காலில் முறிவு ஏற்பட்டது. மேலும் நெல்லை மாவட்டம் வடக்கு அரியநாயகிபுரத்தைச் சேர்ந்த அய்யப்பன் மகன் வெங்கடேஷ் என்கிற ராஜ்குமார் ( வயது 27 ) தேனி மாவட்டம் உத்தமபாளையம் முத்தலாபுரத்தை சேர்ந்த வனராஜ் மகன் விஷால் என்ற சோனை முத்தையா (வயது 20) ஆகியோரை தனிப்படை போலீசார் தேடி வந்தனர். இவர்களைப் பிடிக்க போலீஸ் ஐ.ஜி. பவானீஸ்வரி ,டிஐஜி சரவண சுந்தர் ஆகியோர் மேற்பார்வையில், திருப்பூர் போலீஸ் சூப்பிரண்டு சாமிநாதன் தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டிருந்தது. இந்த தனிப்படையினர் நெல்லை, திருச்சி, தேனி மாவட்டங்களுக்கு சென்று கொலையாளிகளை தேடி வந்தனர். இதில் திருச்சி,மணப்பாறையை சேர்ந்த செல்லமுத்து கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளார். மேலும் இந்த கொலையில் தொடர்புடைய வெங்கடேஷ் மற்றும் சோனை முத்தையாவை தனிப்படை போலீசார் தேடி வந்தனர் . இந்த நிலையில் போலீசார் தேடிய வெங்கடேஷ் என்கிற ராஜ்குமார் விஷால் என்கிற சோனை முத்தையா ஆகிய 2 பேரும் நேற்று மாலை திருப்பூர் வடக்கு போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தனர்.. இதையடுத்து அவர்கள் 2 பேரும் மாவட்ட காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டனர். அவர்களை போலீசார் ரகசிய இடத்தில் வைத்து பலத்த பாதுகாப்புடன் விசாரணை செய்து வருகிறார்கள்.இந்த நிலையில் கோர்ட்டில் சரணடைந்த வெங்கடேசன் தந்தை அய்யப்பனை போலீசார் நேற்று கைது செய்தனர்..