கோவை வேலை வாய்ப்பு முகாமில் பங்கேற்க வந்த கடலூரை சேர்ந்த 2 பி.இ .பட்டதாரிகளை கத்தியால் குத்தி பணம்,செல்போன் கொள்ளை- பட்டப்பகலில் துணிகரம்..!

கோவை: கடலூர் மாவட்டம் பண்ருட்டியை சேர்ந்தவர் சொக்கலிங்கம். இவரது மகன் பூபதி ( வயது 22) அதே ஊரைச் சேர்ந்தவர் வீரபத்திரன். இவரது மகன் வீரபாண்டி (வயது 24) இவர்களும் பி.இ.பட்டதாரிகள்.இவர்கள் கோவை சரவணம்பட்டியில் இன்று நடைபெறும் வேலை வாய்ப்பு முகாமில் பங்கு கொள்ள பஸ்சில் கோவைக்கு வந்தனர்.இன்று அதிகாலை 1:30 மணிக்கு பஸ்சை விட்டு இறங்கி ஆவாரம்பாளையம் பாரதியார் ரோட்டில் உள்ள தனது நண்பர் அறைக்கு செல்வதற்காக நடந்து சென்றனர். அங்குள்ள பெண்கள் பாலிடெக்னிக் அருகே சென்ற போது அந்த வழியாக 2 பைக்கில் வந்த 4 ஆசாமிகள் இவர்களை வழிமறித்து பணம் கேட்டனர்.இருவரும் கொடுக்க மறுத்ததனர். இதனால் ஆத்திரமடைந்த அந்த கொள்ளை கும்பல் இவர்கள் இருவரையும் கத்தியால் குத்தி அவர்களிடம் இருந்த செல்போன்.பணம் ரூ 3 ஆயிரம் ஆகியவற்றை கொள்ளையடித்து விட்டு தப்பிச் சென்று விட்டனர்.’தலையில் பலத்த காயத்துடன் ரோட்டில் கிடந்த இருவரையும் அந்த வழியாக வந்தவர்கள் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அதற்குள் அந்த ஆசாமிகள் தலைமறைவாகி விட்டனர்.இதுகுறித்து காட்டூர் போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகிறார்கள். வேலை வாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள வந்த 2 பட்டதாரிகளை கத்தியால் குத்தி பணம்-செல்போன் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.கொள்ளையர்களை பிடிக்க போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. இவர்கள் முக்கிய சந்திப்புகளில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி .கேமரா மூலம் ஆய்வு செய்து வருகிறார்கள்.