177 சமூக ஊடக கணக்குகள் முடக்கம்..!

புதுடில்லி: விவசாயிகள் போராட்டம் தொடர்பாக பதிவிட்ட 177 சமூக ஊடக கணக்குகளை மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் முடக்கியது. விவசாய விளைபொருட்களுக்கு சட்ட ரீதியான குறைந்தபட்ச ஆதார விலை, கடன் தள்ளுபடி, விவசாயிகள் மீதான வழக்குகளை வாபஸ் பெறுவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பஞ்சாப், ஹரியானா மற்றும் உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் உள்ள விவசாயிகள் டில்லியை முற்றுகையிடும் போராட்டத்தை துவக்கி உள்ளனர். இதையடுத்து மத்திய அரசு மற்றும் விவசாயிகளுடனான பேச்சில் முன்னேற்றம் ஏற்படவில்லை. நாளை(பிப்.,21) டில்லி நோக்கி பேரணி துவக்க உள்ளதாக விவசாய அமைப்புகள் அறிவித்துள்ளன. இந்நிலையில், விவசாயிகள் போராட்டம் தொடர்பாக பதிவிட்ட 42 எக்ஸ் சமூகவலைதள கணக்குகள், 35 பேஸ்புக் கணக்குகள் மற்றும் 14 இன்ஸ்டாகிராம் கணக்குகள் உட்பட 177 சமூக ஊடக கணக்குகளை முடக்கியுள்ளதாகவும், பொது ஒழுங்கை பராமரிக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.