நாடாளுமன்ற கலர் புகை குண்டு வீச்சு விவகாரம்… பாதுகாப்பிற்காக 140 சிஐஎஸ்எப் வீரர்கள் குவிப்பு..!!

புதுடெல்லி: பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 31ம் தேதி தொடங்க உள்ள நிலையில், புதிதாக மத்திய தொழிற்பாதுகாப்பு படை (சிஐஎஸ்எப்) வீரர்கள் 140 பேர் நாடாளுமன்ற பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மக்களவையில் கடந்த ஆண்டு டிசம்பர் 13ம் தேதி, எம்பிக்கள் இருந்த பகுதிக்குள் குதித்த 2 நபர்கள் கலர் புகை குண்டுகளை வீசிய சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது.

இதைத் தொடர்ந்து, நாடாளுமன்ற பாதுகாப்பு குறித்து ஒன்றிய உள்துறை அமைச்சகம் விரிவான ஆய்வு செய்தது. இதன் அடிப்படையில், 140 சிஐஎஸ்எப் வீரர்கள் நாடாளுமன்ற வளாக பாதுகாப்பு பொறுப்பை நேற்று ஏற்றுள்ளனர். நாடாளுமன்ற பாதுகாப்பு பணியில் ஏற்கனவே உள்ள வீரர்களுடன் சிஐஎஸ்எப் படையினர் இணைந்து செயல்படுவார்கள். இவர்கள் நாடாளுமன்றத்திற்கு வரும் பார்வையாளர்களையும் அவர்களின் உடைமைகளையும் சோதிக்கும் பணியில் ஈடுபடுவார்கள்.

அதோடு, படையின் உதவி கமாண்டர் நிலை அதிகாரி ஒருவர் தலைமையின் கீழ் 36 வீரர்கள் கொண்ட தீயணைப்பு குழுவும் செயல்பாட்டில் இருக்கும். பட்ஜெட் கூட்டத் தொடர் வரும் 31ம் தேதி தொடங்கும் முன்பாக நாடாளுமன்ற வளாகம் வீரர்களுக்கு பரிட்சயமாகும் வகையில் நேற்று முதலே பணியை தொடங்கியிருப்பதாக ஒன்றிய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் விமான நிலையங்களை பாதுகாக்கும் சிஐஎஸ்எப் படையினர் விமான நிலையங்களில் பயன்படுத்துவதைப் போல உடல் மற்றும் உடைமைகளை ஆராயும் எக்ஸ்ரே இயந்திரங்கள், பெல்ட், ஷூ மற்றும் கடினமான ஜாக்கெட்களை தட்டில் வைத்து எக்ஸ்ரே ஸ்கேனர் மூலம் ஆய்வு செய்து அனுப்பும் கருவி, கையடக்க டிடெக்டர்கள் ஆகியவற்றின் மூலம் அணு, அணுவாக சோதனை செய்ய உள்ளனர். இப்படையை நிரந்தரமான நாடாளுமன்ற பாதுகாப்பு பணிக்கு ஒதுக்கவும் சிஐஎஸ்எப் தரப்பில் ஒன்றிய உள்துறை அமைச்சகத்திடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.