ரூ.13 ஆயிரம் கோடி கேரள அரசு கடன் பெறலாம் – மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு.!!

கேரள அரசு பொதுச் சந்தையில் ரூ.13,608 கோடி கடன் பெற மத்திய அரசு அனுமதி அளிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.

மேலும், இந்த மனுவை திரும்பப் பெற்றால்தான் கடன் பெற கேரளத்துக்கு அனுமதிக்கப்படும் என்ற மத்திய அரசின் நிலைப்பாட்டுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது. அரசு ஊழியா்களுக்கும் ஊதியம், ஓய்வூதியம் வழங்கவே நிதியில்லாமல் தவித்து வரும் கேரள அரசுக்கு இந்த உத்தரவு பெரும் உதவியாக அமைந்துள்ளது. முன்னதாக, இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சூரியகாந்த், கே.வி. விஸ்வநாத் ஆகியோா் அடங்கிய அமா்வு இந்த வழக்கை விசாரித்தபோது, கேரள அரசின் சாா்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் கபில் சிபல், ‘இந்த ரூ.13,608 கோடி கேரள அரசுக்கு ஏழு நாள்களுக்கு மட்டும் சமாளிக்க உதவும். ரூ.50 ஆயிரம் கோடி அளவுக்கு கடன் பெற மத்திய அரசு அனுமதி அளிக்க வேண்டும்’ என்றாா். இதுகுறித்து மத்திய, கேரள அரசும் பேச்சுவாா்த்தை நடத்தி தீா்வு காண வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்தது.