முடிவுக்கு வந்த தீப்பெட்டி ஆலைகளின் 12 நாள் வேலை நிறுத்த போராட்டம் .!!

மூலப்பொருகள் விலையேற்றத்தினை கட்டுப்படுத்த வேண்டும், சீனாவில் இருந்து வரும் லைட்டர்களை தடை செய்ய வேண்டும் என்ற 2 கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 6 ஆம் தேதி முதல் 17 ஆம் தேதி வரை தமிழகம் முழுவதும் 2530 தீப்பெட்டி ஆலைகள் மூடப்பட்டு இருந்த நிலையில் 12 நாள்கள் கழித்து இன்று முதல் தமிழகம் முழுவதும் அனைத்து தீப்பெட்டி ஆலைகளும் செயல்பட தொடங்கி உள்ளன.

தீப்பெட்டி உற்பத்திக்கு தேவையான மூலப்பொருள்களான அட்டை, பேப்பர், பொட்டாசியம் குளோரைட், மெழுகு, சிவப்பு பாஸ்பரஸ் போன்றவற்றின் விலை 30 சதவீதம் முதல் 50 சதவீதம் உயர்த்தப்பட்டதால் தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இதையெடுத்து தீப்பெட்டி பண்டல்கள் விலையை தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் 300 ரூபாயில் இருந்து 350 ஆக உயர்த்த முடிவு செய்தனர். ஆனால் தீப்பெட்டி கொள்முதல் வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனால் மூலப்பொருகள் விலையேற்றத்தினை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுப்பது மட்டுமின்றி, மானிய விலையில் சிட்கோ மூலமாக தீப்பெட்டி மூலப்பொருள்கள் விநியோகம் செய்ய வேண்டும், சீனாவில் இருந்து வரும் லைட்டர்களை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியறுத்தி தமிழகம் முழுவதும் தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் வேலை நிறுத்தம் செய்யப் போவதாக அறிவித்தனர். இதையெடுத்து தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி, விருதுநகர் மாவட்டம், வேலூர் மாவட்டம் குடியாத்தம், கிருஷ்ணகிரி மாவட்டம் காவிரிப்பட்டணம் உள்ளிட்ட இடங்களில் செயல்பட்டு வந்த 2530 தீப்பெட்டி ஆலைகள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். 12 நாள்கள் வேலை நிறுத்தப்போராட்டத்தினால் சுமார் 250 கோடி ரூபாய் உற்பத்தி பாதிப்பு ஏற்பட்டது. மேலும் 6 லட்சம் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டனர்.

இதற்கிடையில் அனைத்து கட்சிகள் சார்பில் தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் வேலை நிறுத்தம் தொடர்பாக சட்டமன்றத்தில் கவனம் ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் பிரச்சினை குறித்து முன்னாள் அமைச்சரும், கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜூ எடுத்துரைத்தார். இதையெடுத்து சிட்கோ மூலமாக முதற்கட்டமாக மெழுகு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தா.மோ. அன்பரசன் அறிவித்தார். மேலும் மூலப்பொருள்கள் விலையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இந்நிலையில் தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தினை வாபஸ் இன்று முதல் தமிழகத்தில் அனைத்து ஆலைகள் செயல்பட தொடங்கியுள்ளன. தொழிலாளர்கள் வழக்கமான உற்சாகத்துடன் பணிகளை தொடங்கியுள்ளனர்.

இது குறித்து நேஷனல் சிறுதீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்க செயலாளர் சேதுரத்தினம் கூறுகையில், தீப்பெட்டி மூலப்பொருள்கள் விலையை கட்டுப்படுத்தவும், சிட்கோ மூலமாக வழங்க தமிழக அரசு உறுதியளித்துள்ளது. லைட்டர்களை தடை செய்ய மத்தியரசு மூலமாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய இணை அமைச்சர் முருகன் உறுதியளித்துள்ளதாகவும், மத்திய, மாநில அரசுகள் தீப்பெட்டி தொழிலுக்கு தேவையான அனைத்தையும் செய்வதாக உறுதியளித்துள்ளதால் வேலை நிறுத்தப் போராட்டத்தினை கைவிட்டு பணிகளை தொடங்கியுள்ளதாக கூறினார்.