தரமணி சாலையில் 114 கிமீ வேகம்.. சென்னை இளைஞர்களின் சோக முடிவு.. பைக் ரேஸ் மோகத்தால் நடந்த விபரீதம்..!

சென்னை: தலைநகர் சென்னையில் அதிவேகத்தில் பைக்கை இயக்கி சென்ற கல்லூரி மாணவர்களுக்கு நேர்ந்த கொடூர விபத்தின் வீடியோ வெளியாகிப் பரபரப்பைக் கிளப்பி உள்ளது.

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் பல ஆயிரம் பேர் சாலை விபத்துகளில் உயிரிழக்கின்றனர். கடந்த 2021ஆம் ஆண்டில் மட்டும் சுமார் 1.5 லட்சம் பேர் வாகன விபத்துகளில் உயிரிழந்துள்ளனர்.

இதுபோன்ற கொடூர விபத்துகள் நெடுஞ்சாலைகளில் மட்டுமே நடக்கிறது என்று இல்லை. நகரங்களிலும், அவ்வளவு ஏன் சிறு சிறு சாலைகளிலும் கூட இதுபோன்ற மோசமான விபத்துகள் அரங்கேறுகின்றன.

இதற்கு முக்கிய காரணமே சாலை விதிகளை வாகன ஓட்டிகள் கடைப்பிடிக்கத் தவறுவது தான் காரணம். அதிலும் இளைஞர்கள், ஹெல்மெட் கூட அணியாமல் மின்னல் வேகத்தில் செல்கிறார்கள். இதன் காரணமாகவே நகரத்தின் மையப் பகுதிகளிலும் கூட மோசமான விபத்துகள் அரங்கேறுகின்றன. அதிலும் தமிழ்நாட்டில் இதுபோன்ற மின்னல் வேகத்தில் வாகனங்களை ஓட்டுவதால் ஏற்படுத்தும் மரணங்கள் ரொம்பவே அதிகம்.

தமிழ்நாட்டில் யூடியூப்பர்கள் சிலர், மின்னல் வேகத்தில் வாகனங்களை ஓட்டி அதை வீடியோவாக எடுத்து இணையத்திலும் பகிர்கின்றனர். இதுவே பலருக்கும் தவறான முன்னுதாரணமாகி விடுகிறது. மின்னல் வேகத்தில் வாகனம் ஓட்டி அதை வீடியோவாக எடுத்துப் பதிவிடும்போது, பல மோசமான விபத்துகள் ஏற்படுகிறது. அப்படியொரு மிக மோசமான விபத்து தான் தலைநகர் சென்னையில் அரங்கேறியுள்ளது. சென்னை தரமணி தந்தை பெரியார் நகரைச் சேர்ந்தவர் பிரவீன்.. 19 வயதான இவர், சென்னையிலுள்ள தனியார் கல்லூரியில் பிகாம் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.

இவரது நண்பர் ஹரி. 17 வயதான இவர். வேளச்சேரியில் உள்ள அரசுப் பள்ளியில் +2 படித்து வந்தார். இதற்கிடையே இருவரும் பைக்கை மின்னல் வேகத்தில் இயக்கி, அதை வீடியோவாக எடுத்துப் போடத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. பிரவீன் பைக்கை ஓட்ட ஹரி அவரது பின்னால் அமர்ந்து கொண்டார். தரமணி 100 அடி சாலையில் இவர்கள் அதிவேகமாக பைக்கை இயக்கியுள்ளனர். இதனை அவர்கள் வீடியோவாகவும் மொபைலில் பதிவு செய்துள்ளனர்.

அப்போது எஸ்.ஆர்.பி.டூல்ஸ் பகுதியில் இருந்து வந்த லோடு வேன் ஒன்று தரமணி சந்திப்பு அருகே யூடர்ன் செய்துள்ளது. மின்னல் வேகத்தில் வந்ததால், வாகனத்தை அவர்களால் உடனடியாக நிறுத்த முடியவில்லை. லோடு வேனில் பைக் இடிக்காமல் இருக்க வாகனத்தை ஸ்லோ செய்த போது, திடீரென பைக் கட்டுப்பாட்டை இழந்துள்ளது. இதனால் இருவருக்கும் மிக மோசமான காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர்களை மீட்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இந்த விபத்து செவ்வாய்க்கிழமை நடந்ததாகக் கூறப்படுகிறது.

இதற்கிடையே இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ இப்போது வெளியாகி உள்ளது. அதில் இருவரும் சுமார் 114 கிமீ வேகத்தில் தரமணி சாலையில் வேகமாகச் செல்கின்றனர். அப்போது லோடு வேன் யூடர்ன் போடுவதைப் பார்த்து, இவர்கள் வண்டியை ஸ்லோ செய்ய முயலும்போது கட்டுப்பாட்டை இழந்து இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இவை அனைத்தும் அந்த வீடியோவில் மிகத் தெளிவாகப் பதிவாகி உள்ளது. அவர்கள் மின்னல் வேகத்தில் சென்றதே இந்த விபத்திற்குக் காரணமாக அமைந்துள்ளது. இதற்கிடையே படுகாயமடைந்த இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அவர்கள் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அன்று இரவே சிகிச்சை பலனின்றி பிரவீன் இறந்தார். பின்னால் அமர்ந்திருந்த ஹரிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், அவரும் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி இறந்தார். இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த கிண்டி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், லோடு வேன் டிரைவர் குணசேகரனை (45) கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.