உலகம் முழுவதும் இந்துக்கள் மீது தாக்குதல் 1000% அதிகரிப்பு – அதிர்ச்சி தகவல்..!

புதுடெல்லி: உலகம் முழுவதும் இந்துக்கள் மீதான தாக்குதல் ஆயிரம் சதவீதம் அதிகரித்துள்ளது என்ற அதிர்ச்சி தகவலை அமெரிக்காவை சேர்ந்த அறிவியல் ஆராய்ச்சி அமைப்பு வெளியிட்டுள்ளது.

அமெரிக்காவின் நியூ ஜெர்சியில், நெட்வொர்க் கான்டாஜியன் ஆராய்ச்சி மையம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், வட அமெரிக்க இந்துக்கள் கூட்டணி சார்பில் நடந்த நிகழ்ச்சியில் நெட்வொர்க் கான்டாஜியன் ஆராய்ச்சி மையத்தின் தலைமை அறிவியல் அதிகாரி ஜோயல் பிங்கல்ஸ்டெயின் பேசுகையில், ”அமெரிக்கா மற்றும் உலகின் பல்வேறு பகுதிகளில் இந்துக்களுக்கு எதிராக வன்முறை தாக்குதல்கள் 1000 சதவீதம் அதிகரித்துள்ளன. வெள்ளை ஆதிக்க வர்க்கத்தினர், முஸ்லிம்கள் உள்ளிட்டோர் இந்த சமூகத்தினருக்கு எதிராக கருத்துகள் வெளியிடுவது, வெறுப்புணர்வை துாண்டுதல் போன்றவற்றை செய்து வருகின்றனர்.

கடந்த சில மாதங்களில் அமெரிக்கா, கனடாவில் கோயில்கள் மீது தாக்குதல் சம்பவங்கள் அதிகமாக நடந்து வருகிறது. சமீபத்தில் இங்கிலாந்திலும் இந்து கோயில் சேதப்படுத்தப்பட்டுள்ளது. வரும் காலங்களில் இந்த சமூகத்தின் மீதான தாக்குதல் அதிகரிக்கலாம்,” என்றார். அமெரிக்க நாடாளுமன்ற எம்பி ஹாங்க் ஜான்சன் பேசும்போது, ”இந்துக்களின் மீது நடத்தப்படும் தாக்குதலை கண்டித்து அனைவரும் ஒன்று சேர வேண்டும். இந்து அமெரிக்கர்கள் மற்றும் இதர குழுக்கள் மீது கட்டவிழ்த்து விடப்படும் வன்முறைகள் தொடர்ந்து நடந்து வருவது கவலையளிக்கிறது” என்றார்.