100 கிடா; 1,300 கிலோ கறி; 10,000 பேருக்கு அசைவ விருந்து; ரூ.10 கோடி மொய் வசூல்- திமுக எம்எல்ஏ நடத்திய பிரம்மாண்ட மொய் விருந்து..!

பேராவூரணி தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ. அசோக்குமார், 100 கிடா வெட்டி 10,000 பேருக்கு அசைவ விருந்து வைத்து நடத்திய மொய் விருந்து விழாவில் ரூ10 கோடி மொய் வசூலாகியிருப்பது பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.மொய் விருந்து வரலாற்றிலேயே இதுவே அதிகபட்சம் என அப்பகுதியினர் பேசி வருகின்றனர்.

தஞ்சாவூர் மாவட்டத்தின் கடைமடை பகுதியான பேராவூரணி மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களிள் கடந்த நூறு ஆண்டுகளுக்கு மேலாக மொய் விருந்து விழா நடத்தப்பட்டு வருகிறது. திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகள், வீடு கட்டுதல், விவசாய நிலங்கள் வாங்குதல், தொழில் முதலீடு,கல்வி செலவு உள்ளிட்ட பெரிய அளவில் பண தேவை இருக்கும் சமயத்தில் அப்பகுதியினர் மொய் விருந்து நடத்துவது வழக்கம்.

மொய் விருந்து விழா என அழைப்பிதழ் அச்சடித்து உறவினர்கள், நண்பர்கள் உள்ளிட்ட பலருக்கும் கொடுப்பார்கள்.மொய் விருந்திற்கு வரும் அனைவருக்கும் கிடா வெட்டி கறிக்குழம்பு சமைத்து அசைவ விருந்து வைப்பார்கள்.சாப்பிட்ட பிறகு விருந்தினர்கள் தங்களால் முடிந்த பணத்தை மொய்யாக தங்கள் பெயரில் மொய் விருந்து நடத்துபவரின் மொய் நோட்டில் எழுதி செல்வார்கள்.

மொய் விருந்து நடத்தியவர்கள் வசூலான பணத்தின் மூலம் தங்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொள்வர். பணத் தேவைக்காக வங்கியிலோ, தனிப்பட்ட நபர்களிடமோ வட்டிக்கு கடனாக பணம் வாங்காமல் இருக்கவும், கஷ்டத்தில் இருக்கும் உறவுகளுக்கு கை கொடுத்து உதவவும் தொடங்கப்பட்டதுடன் தொடர்ந்து கடைபிடிக்கப்பட்ட மொய் விருந்து கலாசாரம் இன்றைக்கு பெரிய அளவில் வளர்ச்சியடைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு நபர் மொய் பிடித்தால் அடுத்த ஐந்து ஆண்டுக்கு பிறகு தான் அடுத்த மொய் பிடிக்க வேண்டும்.மொய் செலுத்தியவர் மொய் விருந்து விழா நடத்தும் போது,மொய் வாங்கியவர்கள் அவர்கள் எழுதிய பணத்தை விட கூடுதலாக சேர்த்து திரும்ப மொய் எழுதும் நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது.கொரோனா பரவல், லாக்டெளன் உள்ளிட்ட காரணங்களால் கடந்த இரண்டு வருடங்களாக மொய் விருந்து விழாக்கள் பெரிய அளவில் நடைபெறவில்லை.

இந்நிலையில் தற்போது மீண்டும் மொய் விருந்து விழாக்கள் பழைய உற்சாகத்துடன் நடைபெறத் தொடங்கியுள்ளன. பேராவூரணி தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ அசோக்குமார் ஐந்து வருடங்களுக்கு முன்பு மொய் விருந்து நடத்தினார்.இந்த நிலையில் நேற்று மீண்டும் மொய் விருந்து நடத்தினார். பேராவூரணி ஸ்டேட் பேங்க அருகில் உள்ள திருமண மண்டபத்தில் காதணி விழா மொய் விருந்து என்ற பெயரில் மொய் விருந்திற்கான ஏற்பாட்டை விமர்சையான செய்திருந்தார்.

இதற்காக 100 கிடா வெட்டப்பட்டது.1,300 கிலோ கறியில் பெரிய அண்டாவில் கம கம மட்டன் குழம்பு,குடல் கூட்டு மற்றும் சோறு சமைக்கப்பட்டிருந்தது.அசைவம் சாப்பிடாதவர்களுக்கு தனியாக சைவ உணவு தயார் செய்திருந்தனர். 200க்கும் மேற்பட்டோர் சமையல் கலைஞர்கள் மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டு சமையல் பணியில் ஈடுப்படுத்தப்பட்டனர்.

காலையிலேயே மொய் நோட்டு எழுதுபவர்கள், பணத்தை வாங்கி பண சட்டியில் போடுபவர்கள் பணம் எண்ணும் மிஷினுடன் தயார் நிலையில் இருந்தனர்.குறிப்பிட்ட ஊரைச் சேர்ந்தவர்கள் குறிப்பிட்ட இடத்தில் மொய் செலுத்துவதற்கு வசதியாக அந்தந்த ஊரின் பெயர்கள் அடங்கிய போர்டு மொய் எழுதும் இடத்தில் வைக்கப்பட்டிருந்தது.

துப்பாக்கி ஏந்திய தனியார் செக்யூரிட்டிகள் பாதுகாப்பிற்கு நிறுத்தப்பட்டிருந்தனர். பத்துக்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்கள் பொறுத்தப்பட்டு அனைத்தும் கண்காணிக்கப்பட்டன. பேராவூரணி முழுவதும் மொய் விருந்தை வாழ்த்தி தி.மு.க நிர்வாகிகள் பிளக்ஸ் வைத்திருந்தனர். விழாவிற்கு வந்தவர்களுக்கு இலை நிறைய சோறு, கரண்டி நிறைய கறி வைத்து விருந்து வைக்கப்பட்டது. ஒரே நேரத்தில் 1,000 பேர் சாப்பிடக்கூடிய வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

சாப்பிட்ட பிறகு ரூ1,000 தொடங்கி ஐந்து லட்சம் வரை ஒவ்வொருவரும் தங்கள் வசதிகேற்ப மொய் எழுதி சென்றனர். இதில் மொத்தம் ரூ 10 கோடி மொய் வசூலாகியிருந்தது குறிப்பிடத்தக்கது. மொய் விருந்து வரலாற்றிலேயே ரூ10 கோடி வசூலாகியிருப்பது இதுவே முதல் முறை,இதுவே அதிகப்பட்சம் என்றும் புருவத்தை உயர்த்தியபடி அனைவரும் பேசி சென்றனர்.

மொய் விருந்தில் வசூலான பணத்தை தி.மு.க எம்.எல்.ஏ அசோக்குமார் பாதுகாப்பாக எடுத்துச் சென்றார். எந்த ஒரு மொய் தேவையாக இருந்தாலும் தவறாமல் கலந்து கொண்டு தன்னால் முடிந்த அளவில் மொய் எழுதுவார் அசோக்குமார். சாதி, மத வேறுபாடின்றி அனைவர் வீட்டு விழாக்களிலும் கலந்துகொள்பவர். அதனாலேயே பழைய, புதிய நடை என பலரும் தங்கள் வசதிகேற்ப மொய் எழுதினர்.

இதன் மூலம் ரூ 10 கோடி வசூலானதாகவும் ஆளும் கட்சி எம்.எல்.ஏ அசத்திவிட்டதாக ஆச்சர்யம் பொங்க பேசி வருகின்றனர்.இது குறித்து தி.மு.க எம்.எல்.ஏ அசோக்குமாரிடம் பேசினோம்,“எல்லோருக்கும் விருந்து வைக்க வேண்டும் என்ற அடிப்படையில் எங்க பேரப்பிள்ளைகளுக்கு காதணி விழா நடத்தி விருந்துக்கான ஏற்பாட்டை செய்திருந்தேன். வந்திருந்த அனைவரும் மனதார வாழ்த்தியதாக” உற்சாகத்துடன் தெரிவித்தார்.