10 லட்சம் வேலை காலி பணியிடங்கள்… ரெடியா இருக்கு… என்ன போறீங்களா..?

இந்தியா, அமெரிக்கா உட்பட உலகின் பல நாடுகளில் வேலை இல்லா திண்டாட்டம் அதிகரித்து வரும் நிலையில் கனடாவில் 10 லட்சத்திற்கும் அதிகமான வேலைகள் காலியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

கடந்த மே மாதத்தில் இருந்து காலியிடங்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதாக கனடாவின் வேலைவாய்ப்பு குறித்த புள்ளிவிவர தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனவே வெளிநாடு சென்று வேலை பார்க்கும் விருப்பமுள்ளவர்கள் கனடாவில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

உலகம் முழுவதும் படித்த இளைஞர்கள் வேலைவாய்ப்பு இன்றி தவித்து வருகின்றனர் என்பதும், படித்த படிப்புக்கு தகுந்த வேலை பெற போராடி வருகின்றனர் என்றும் செய்திகள் வெளியாகி வருகின்றன. இந்த நிலையில் கனடாவில் புதிய வேலை வாய்ப்புகளும் ஓய்வு பெறுவதால் ஏற்படும் காலியிடங்களும் அதிகரித்து வருவதாகவும் சுமார் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட வேலைகள் காலியாக உள்ளன என்று கூறப்படுகிறது.

2022ஆம் ஆண்டு மே மாதம் முதல் கனடாவில் தொழிலாளர் பற்றாக்குறை இருந்து வருவதாகவும் இதனால் கனடாவில் குடியேறுவதற்கான தேவை அதிகரித்து வருவதாகவும் கூறப்படுகிறது. கனடாவில் வேலை வாய்ப்பு அதிகம் இருப்பதற்கு முக்கிய காரணம் விரைவில் ஓய்வு பெற இருக்கும் அதிக எண்ணிக்கையிலான வயதான பணியாளர்கள் என்று கூறப்படுகிறது.

எனவே 2022ஆம் ஆண்டில் வெளிநாட்டில் இருந்து கனடாவுக்கு வரும் நிரந்தர குடியிருப்பாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க கனடா அரசு தயாராகி வருகிறது. 2024 ஆம் ஆண்டுக்குள் 4.5 லட்சத்திற்கும் மேல் கனடாவில் வெளிநாட்டு குடியிருப்பாளர்களின் எண்ணிக்கை உயரும் என்று செய்தி அறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது.

கனடா நாட்டில் தற்போதைய நிலையில் வேலையின்மை குறைவாகவும், வேலை வாய்ப்பு அதிகமாகவும் இருப்பதால் அந்த வேலை வாய்ப்புகளை புலம்பெயர் தொழிலாளர்கள் பயன்படுத்தி நல்ல வேலைவாய்ப்புகளை பெற்று வருகின்றனர். மேலும் கனடாவில் நிரந்தரமாக வசிப்பதற்கான விண்ணப்பத்தையும் அவர்கள் பதிவு செய்து வருகின்றனர்.

கனடாவில் உள்ள ஆல்பர்ட்டா மற்றும் ஒன்டாரியோ ஆகிய நகரங்களில் ஏப்ரல் மாதத்தில் சராசரியாக 100 பேர்களில் ஒருவர் மட்டுமே வேலை இல்லாமல் இருந்துள்ளனர். மார்ச் மாதத்திலும் அதே நிலைமை தான் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. நியூஃபவுண்ட்லேண்ட் மற்றும் லாப்ரடார் ஆகிய நகரங்களில் 100 பேர்களில் சுமார் நான்கு பேர்கள் மட்டுமே வேலை இல்லாமல் இருந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நியூஸ் தகவலின்படி, கனடாவில் உள்ள 90 லட்சம் பேர் இன்னும் 10 ஆண்டுகளில் ஓய்வு பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்திய RBC கணக்கெடுப்பின்படி, கனேடியர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் முன்கூட்டியே ஓய்வு பெறுகிறார்கள் என்றும், மேலும் ஓய்வு வயதை நெருங்கும் 10 பேரில் மூன்று பேர் தொற்றுநோய் காரணமாக முன்கூட்டியே ஓய்வு பெறுவதை விரும்புகிறார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.

எனவே இந்தியா உள்பட உலகின் பல்வேறு நாடுகளில் உள்ள வேலையில்லாத இளைஞர்கள் கனடா சென்றால் தகுதிக்கேற்ப வேலை கிடைப்பதுடன் வாழ்க்கையில் செட்டிலாக அதிக வாய்ப்புகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.