கோகுல்ராஜ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனையை ரத்து செய்யக் கோரி யுவராஜ் உட்பட 10 பேர் உயர்நீதிமன்றத்தில் மனு..!

நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ் கடந்த 2015-ம் ஆண்டு ஆணவக் கொலை செய்யப்பட்டார்.

இந்த வழக்கை விசாரித்த மதுரை மாவட்ட வன்கொடுமை வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றம், தீரன் சின்னமலை பேரவைத் தலைவர் யுவராஜ் உட்பட 10 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது.

இந்த தண்டனையை ரத்து செய்யக் கோரி யுவராஜ், அருண், கிரிதர், ரஞ்சித் உள்ளிட்ட 10 பேர் மதுரை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்துள்ளனர்.

அந்த மனுவில், பேட்டி மற்றும் சிசிடிவி காட்சியின் அடிப்படையில் கீழமை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது என்றும், சிசிடிவி காட்சிகளை பொறுத்தவரை கோகுல்ராஜை கடத்தியதாகவோ, கொலை செய்ததாகவோ பதிவுகள் இல்லை எனவும், ஆனால் அதனை ஆதாரமாகக் கொண்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் சாட்சிகளாக ஏற்றுக் கொள்ளப்பட்டவர்கள் பெரும்பாலும் அதிகாரிகளும், நிபுணர்களும் தான் என்றும், எனவே கீழமை நீதிமன்றம் அளித்துள்ள ஆயுள் தண்டனையை ரத்து செய்யவும், அதுவரை தண்டனையை நிறுத்தி வைத்து ஜாமீன் வழங்குமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர இருப்பதாக கூறப்படுகிறது.