1 லிட்டர் பால் ரூ.210… ஒரு கிலோ கோழி கறி ரூ.800… கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் பாகிஸ்தான்..!

பாகிஸ்தானின் பொருளாதாரச் சிக்கல் தீவிரமடைந்து, அதளபாதாளத்துக்குச் சென்றுள்ளது.

அந்நாட்டில் பால் லிட்டர் ரூ.210 ஆகவும், கோழிக்கறி கிலோ ரூ.780 முதல் ரூ.800 வரையிலும் விற்கப்படுவதால் மக்கள் தவிக்கின்றனர்

பாகிஸ்தானுக்கு உதவுவதாகக் கூறிய சர்வதேச செலவாணி நிதியம் நிதியுதவி வழங்குவதில் காலதாமதமாகி வருகிறது. இதனால் பொருளாதாரச் சிக்கல்களை சமாளிக்க முடியாமல் பாகிஸ்தான் அரசு விழிபிதுங்கி நிற்கிறது.

பாகிஸ்தான் பொருளாதாரம் கொரோனா பரவலுக்குப்பின் மிகவும் மோசமான நிலைக்குச் சென்றுவிட்டது. அங்குநிலவும் அரசியல் ஸ்திரமற்றச் சூழல், தீவிரவாதம், தீவிரவாதத்துக்கு நிதியுதவி போன்றவற்றாலும்,சர்வதேச நிறுவனங்கள் முதலீடு செய்யத் தயங்கி வருகின்றன.

இதனால் பாகிஸ்தானுக்கு அந்நிய முதலீடு என்பது மிகவும் குறைவாகும். சுற்றுலாப் பயணிகள் வருகையும் ஐரோப்பிய நாடுகளில் இருந்து வருவதும் பெரும்பாலும் இல்லை. இதனால், ஏற்றுமதியை பெரும்பாலும் நம்பிதான் மட்டுமே பாகிஸ்தான் பொருளாதாரம் இருந்து வருகிறது.

ஆனால், கொரோனோவுக்குப்பின் பாகிஸ்தானின் வர்த்தகமும் கடுமையாகப் பாதிக்கப்பட்டதால், அரசிடம் இருந்த அந்நியச் செலாவணி கையிருப்பு படிப்படியாக் குறையத் தொடங்கியது. ஏறக்குறைய இலங்கை சந்தித்து வரும் பொருளாதாரச் சிக்கலுக்கு பாகிஸ்தான் தள்ளப்பட்டுள்ளது. வெளிநாட்டுக் கடனுக்கு வட்டி, கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கு அந்நியச் செலாவணி தேவை, நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தவும் டாலர் தேவை என்பதால், உலக வங்கி, சர்வதேச செலாவணி நிதியத்தை கையேந்தி நிற்கிறது.

இதனால் பாகிஸ்தானில் விலைவாசி கடுமையாக உயர்ந்துவிட்டது, உணவுப் பொருட்கள் விலையும் விண்ணை முட்டும் அளவுக்கு அதிகரித்துள்ளது. பால் லிட்டர் ரூ.190 ஆக இருந்த நிலையில் நேற்றிலிருந்து ரூ.210 ஆக அதிகரித்துவிட்டது என்று டான் செய்திகள் தெரிவிக்கின்றன.

கோழி இறைச்சி விலை கிலோ ரூ.600 வரை இருந்தநிலையில் தற்போது கிலோ ரூ.750 முதல் ரூ.800 வரை விற்கப்படுகிறது. பிராய்லர் சிக்கன் விலை கிலோ ரூ.500 வரை உயர்ந்துள்ளது. மாட்டிறைச்சி விலை கிலோ உச்சகட்டமாக ரூ.1000 முதல் ரூ.1100 ஆக உயர்ந்துள்ளது. இதனால் மக்கள் உணவுப் பொருட்களை விலை கொடுத்து வாங்க முடியாமல் பெரிய துன்பத்துக்கு ஆளாகியுள்ளனர்.

கராச்சி பால் சில்லறை விற்பனையாளர்கள் ஒருங்கிணைப்பாளர் வஹீத் காடி கூறுகையில் ” 1000-க்கும் மேற்பட்ட பால் கடைக்காரர்கள் பால் விலை உயர்வால் என்ன செய்வதென தெரியாமல் விற்பனை செய்கிறார்கள். எங்களுக்கு சாமானிய மக்கள்தான் வாடிக்கையாளர்கள். ஆனால் விலைவாசி உயர்வால் பால் லிட்டர் ரூ.210 ஆக உயர்ந்துவிட்டதால், மக்கள் பெரிதும் சிரமப்படுகிறார்கள்” எனத் தெரிவித்தார்

கோழிப்பண்ணை உரிமையாளரும், மொத்தவிற்பனைஅமைப்பின் பொதுச்செயலாளர் கமல் அக்தர் சித்திக் கூறுகையில் ” உயிருடன் கோழிஇறைச்சி விலை ரூ.600 ஆகவும், இறைச்சி மட்டும் கிலோ ரூ.700 முதல் ரூ.800 வரை விற்கப்படுகிறது. இடுபொருட்கள் விலை அதிகரித்துவிட்டதால் விலையை உயர்த்துவதைத் தவிர வேறு வழியில்லை” எனத்தெரிவித்தார்.

பாகிஸ்தானில் பெட்ரோல் விலையும் லிட்டருக்கு ரூ.20உயர்ந்துள்ளது. இதனால் சமானிய மக்கள் முதல் நடுத்தர குடும்பத்தினர் வரை கடும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். சர்வதேச நிதியத்துக்கும் பாகிஸ்தான் அரசுக்கும் இடையே கடன் உடன்பாடு ஏற்படுவதில் தொடர்ந்து இழுபறி நீடிப்பதால் பொருளாதாரச் சிக்கல் தொடர்ந்து வருகிறது..