கொரோனா தொற்று காரணமாக 2020ஆம் ஆண்டுக்கு பிறகு இந்தியாவின் சுற்றுலா வணிகம் பெரிதும் பாதிக்கப்பட்டது. இந்நிலையில், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள ஜாபர்வான் மலைத்தொடரின் அடிவாரத்தில் அமைந்துள்ள துலிப் கார்டனை பார்வையிடுமாறு பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் பக்கத்தில் மக்களை கேட்டுக் கொண்டார். அதன் விளைவாக, காஷ்மீர் பள்ளத்தாக்குக்கு சுற்றுலாப் பயணிகளால் நிறைந்தது.
அதன் தொடர்ச்சியாக, 2024ஆம் ஆண்டின் தொடக்கத்திலும் பிரதமர் மோடி சுற்றுலா தொடர்பான தனது பார்வையை பரவலாக்கியுள்ளார். அதன்படி, நேற்று முன் தினம் லட்சத்தீவுக்கு பயணமான பிரதமர் மோடி, சமூக ஊடகங்களில் அந்த புகைப்படங்களைப் பகிர்ந்து, மக்களை லட்சத்தீவுக்கு வருமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். அதன் விளைவாக, கூகுள் தேடலில் லட்சத்தீவு தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.
பிரதமர் தனது லட்சத்தீவு பயணத்தின் போது ஸ்நோர்கெலிங் சென்றார். ஸ்நோர்கெல்லிங் என்பது வாயில் ஒரு குழாயை வைத்து சுவாசித்து கொண்டு கடலில் நீந்தும் ஒரு முறையாகும். மேலும், அழகிய கடற்கரை மணலில் நடைபயிற்சி மேற்கொண்டார். ஓய்வாக அமர்ந்திருந்தார். இந்த புகைப்படங்களை அவர் தனது சமூக ஊடக பக்கங்களில் பகிர்ந்திருந்தார். அந்த படங்கள் வைரலாகின. இதனால் லட்சத்தீவு குறித்த தகவல்களை கூகுளில் ஏராளமானோர் சேகரித்து வருகின்றனர். வரும் காலங்களில் லட்சத்தீவில் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது