அதிமுக-விலிருந்து இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம், கட்சியின் பெயர், கொடி, சின்னம், லெட்டர் பேட், சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு…

அதிமுக-விலிருந்து இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம், கட்சியின் பெயர், கொடி, சின்னம், லெட்டர் பேட் ஆகியவற்றை தொடர்ந்து பயன்படுத்தி வருவது தொண்டர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி வருவதால், இவற்றை பயன்படுத்த ஒபிஎஸ் அணியினருக்கு தடை விதிக்க கோரி அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி என்.சதீஷ்குமார், கட்சியின் பெயர், சின்னம், கொடி, லெட்டர் பேட் ஆகியவற்றை பயன்படுத்த ஒ.பி.எஸ்-க்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து ஒபிஎஸ் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கில், இரு நீதிபதிகள் அமர்வு தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தது. இந்த வழக்கில் இருதரப்பு வாதங்களில் ,இந்த இடைக்காலத் தடை உத்தரவு இறுதியானதல்ல என்றும், கட்சியில் இருந்து நீக்கப்பட்டதற்கு தடை விதிக்கவில்லை என்பன உள்ளிட்ட காரணங்களை தனி நீதிபதி விளக்கிய பிறகுதான் உத்தரவை பிறப்பித்ததாகவும் எடப்பாடி பழனிசாமி தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன. 30 ஆண்டுகளாக கட்சியில் உள்ள ஓ.பி.எஸ். எந்த கொடியை பயன்படுத்த தடை கோருகிறார்கள் என்பது தெரியவில்லை என கூறுவது வினோதமாக உள்ளதாகவும், இன்னும் எக்ஸ் சமூக வலைதளத்தில் ஒருங்கிணைப்பாளர் என்றே குறிப்பிட்டுள்ளதாகவும், ஒருங்கிணைப்பாளர் என்று கூறியே அறிக்கை வெளியிடுவதாகவும் இபிஎஸ் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது.

பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமியை தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை கலைத்ததையும் தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளதாகவும் சுட்டிக்காட்டினார். அதிமுக கட்சியின் சொத்துகளான கட்சி கொடி, லெட்டர் பேடு ஆகியவை யாருக்கும் சொந்தமானதல்ல என்பதால், கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பி.எஸ். தாக்கல் செய்த இந்த மேல்முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண் கோரிக்கை வைத்தார். பின்னர் நீதிபதிகள், கட்சியிலிருந்து நீக்கப்பட்ட பிறகு கட்சியினரை நீக்க ஒபிஎஸ்-க்கு அதிகாரம் உள்ளதா எனவும், கட்சி கொடியை பயன்படுத்த முடியுமா எனவும் கேள்வி எழுப்பியபோது, ஒபிஎஸ் தரப்பில் கட்சியின் கொடி கட்சிக்கு சொந்தமானதல்ல எனவும், தன்னால் கட்சியினர் நீக்கப்படுவது இந்த வழக்கிற்கு அப்பாற்பட்டது என விளக்கம் அளித்தார். இரு தரப்பு வாதங்களையும் (நவம்பர் 26ல்) கேட்டறிந்த நீதிபதிகள், தடையை நீக்கக் கோரும் ஒபிஎஸ் மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்திருந்தனர். இந்த மேல்முறையீட்டு மனு நீதிபதிகள் மகாதேவன் மற்றும் முகமது சபீக் ஆகியோர் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தனி நீதிபதி கொடுத்த தீர்ப்பு செல்லும் என்றும், ஓ.பி.எஸ். தரப்பு தனி நீதிபதியின் தீர்ப்புக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு  அதிமுக பெயர், கொடி, சின்னத்தை ஓபிஎஸ் பயன்படுத்த தனி நீதிபதி விதித்த தடை செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.