பெண்களே தொழில் தொடங்க பணம் இல்லையா..?

பெண்கள், சமையலறையின் நான்கு சுவர்களுக்குள் முடங்கிக்கிடந்த காலம் மலை ஏறிவிட்டது. இன்று பால் பண்ணை முதல் நவீன சிறு தொழில்கள் வரை பெண்கள் தங்கள் ஆளுமையை நிரூபித்து வருகின்றனர். இத்தகைய முன்னேற்றத்திற்கு மேலும் வலுசேர்க்கும் விதமாக, மத்திய அரசு ‘லக்பதி தீதி’ (Lakhpati Didi) என்ற புரட்சிகரமான திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. நிதிப் பற்றாக்குறையால் தங்களின் தொழில் கனவுகளை நனவாக்க முடியாமல் தவிக்கும் பெண்களுக்கு, இந்த திட்டம் ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.

இந்தத் திட்டத்தின் மிக முக்கியமான சிறப்பம்சம் என்னவென்றால், இதில் வழங்கப்படும் 5 லட்சம் ரூபாய் வரையிலான கடனுக்கு வட்டி கிடையாது. பொதுவாக வங்கிகளில் தொழில் கடன் வாங்கினால் அதிக வட்டி செலுத்த வேண்டியிருக்கும். ஆனால் லக்பதி தீதி திட்டத்தில் முழு வட்டிச் சுமையையும் அரசாங்கமே ஏற்றுக்கொள்கிறது. இதனால் பெண்கள் வட்டி குறித்த கவலையின்றி, தொழிலை லாபகரமாக நடத்துவதில் மட்டும் கவனம் செலுத்த முடிகிறது. 18 முதல் 50 வயதுக்குட்பட்ட, ஏதேனும் ஒரு சுயஉதவிக் குழுவில் (SHG) உறுப்பினராக உள்ள பெண்கள் இந்த சலுகையைப் பெறத் தகுதியுடையவர்கள் ஆவர்.

வெறும் நிதியுதவியுடன் நின்றுவிடாமல், பெண்கள் தாங்கள் தொடங்கும் தொழிலில் நிபுணத்துவம் பெற இலவச வணிகப் பயிற்சியையும் (Business Training) அரசே வழங்குகிறது. கைவினைப்பொருட்கள் தயாரிப்பு, ஊறுகாய் மற்றும் அப்பளம் தயாரித்தல், தையல் கலை, காளான் வளர்ப்பு அல்லது பால் பண்ணை போன்ற பல்வேறு வாழ்வாதார தொழில்களை தொடங்க இத்திட்டம் வழிகாட்டுகிறது. ஒவ்வொரு பெண்ணும் ஆண்டுக்கு குறைந்தது ஒரு லட்சம் ரூபாய் வருமானம் ஈட்டி, சமூகத்தில் லட்சாதிபதிகளாக வலம் வர வேண்டும் என்பதே இந்தத் திட்டத்தின் இலக்காகும்.

இத்திட்டத்தில் இணைய விரும்பும் பெண்கள், தங்கள் பகுதி அல்லது மாவட்ட அளவிலான சுயஉதவிக் குழு அலுவலகத்தை அணுகி விவரங்களைப் பெறலாம். மேலும், மத்திய ஊரக வளர்ச்சி அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாகவும் ஆன்லைனில் விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்கும் போது, நீங்கள் என்ன தொழில் தொடங்கப் போகிறீர்கள் என்பது குறித்த ஒரு சிறிய திட்ட அறிக்கையை (Business Plan) இணைக்க வேண்டியது அவசியமாகும். பெண்களின் பொருளாதார சுதந்திரத்தை உறுதி செய்யும் இந்தத் திட்டம், வரும் காலங்களில் கிராமப்புறப் பொருளாதாரத்தில் ஒரு பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.