அனைவருக்குமான வளர்ச்சி இல்லாமல் நமது நாடு உண்மையான முன்னேற்றத்தை காண முடியாது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
மறைந்த முன்னாள் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லியின் நினைவு சொற்பொழிவு நிகழ்ச்சி டெல்லியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு முன்னாள் மத்திய நிதியமைச்சர் அமைச்சர் அருண் ஜெட்லிக்கு நினைவஞ்சலி செலுத்தினார்.இதன் பின்னர் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி கூறியதாவது: மத்திய அரசு, அனைவரையும் அரவணைத்து அனைவரும் சேர்ந்து முன்னேறுவோம்’என்ற கொள்கைப்படி கடந்த எட்டு ஆண்டுகளில் ஏராளமான சீர்திருத்தங்களை மேற்கொண்டுள்ளது. அவை கட்டாயத்தின் பேரில் செய்யப்பட்ட சீர்திருத்தங்கள் கிடையாது. அடுத்த, 25 ஆண்டுகளுக்கான வளர்ச்சிப் பாதையைஉருவாக்க வேண்டும் என்ற முழு அர்ப்பணிப்புடன் செய்யப்பட்ட சீர்திருத்தங்கள். அனைவருக்கும் வங்கிச் சேவை கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அரசு செயல்பட்டு வருகிறது. இதனால், எட்டு ஆண்டுகளில், 45 கோடி வங்கிக் கணக்குகள் துவக்கப்பட்டு உள்ளன. அனைவருக்கும் சமையல் எரிவாயு இணைப்பு, கழிப்பறை வசதிகள் கிடைக்க வேண்டும் என விரும்பினோம். இன்று, பத்து கோடி கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன.
கழிப்பறை இல்லாத கிராமமே இல்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது. ஒன்பது கோடிக்கும் அதிகமானோருக்கு, இலவச சமையல் எரிவாயு இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.கடந்த, 2014க்கு முன், பத்து ஆண்டுகளில் சராசரியாக, ஐம்பது மருத்துவக் கல்லுாரிகள் தான் துவக்கப்பட்டன. நாங்கள் ஆட்சிக்கு வந்த, எட்டு ஆண்டுகளில், 4 மடங்கு அதிகமாக, அதாவது, 209 புதிய மருத்துவக் கல்லுாரிகள் திறக்கப்பட்டுள்ளன. நாட்டின் வளர்ச்சியில் தனியார் துறையையும் அரசு பங்குதாரராக கருதுகிறது.மத்திய அரசு, கவர்ச்சியான கொள்கைகளை அறிவிக்காமல் மக்கள் நலனை மையமாக வைத்து செயல்பாடுகளை மேற்கொண்டு வருகிறது. உலகின் மிகப் பெரிய பொருளாதார நாடான இந்தியா, கொரோனா பாதிப்பில் இருந்து விரைந்து மீண்டதே இதற்கு சான்று. இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.
Leave a Reply